கடந்த ஏப்ரல் 14- ந்தேதி தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!

திருச்சியைச் சேர்ந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு 2, 495.14 கோடி கோடி சொத்து இப்பதாகவும், அதில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள மிகவும் பிரபலமான காவேரி மருத்துவமனை கே.என்.நேருவுக்கு சொந்தமானதாகவும் குறிப்பிட்டார். அதே போல், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு 1,022 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும் வெளியிட்டார்.

இந்த நிலையில்தான், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாள் விழா நவல்பட்டு அண்ணா நகரில் நடந்தது. இதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ‘‘இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலம் மற்றும் நம்பர் ஒன் முதல் முதலமைச்சர் என இரண்டு வருடத்தில் இவ்வளவு பெரிய பெயர் பெற்ற முதல்வருக்கு தான், நாம் பிறந்த நாள் கொண்டாடி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டவர்கள் பாலைவனமாக விட்டு சென்று விட்டனர். அந்த பாலைவனத்தை பதப்படுத்தி நாட்டின் வளர்ச்சி என்ற விளைச்சலை தந்து நம்பர் ஒன் முதலமைச்சர் என்ற பெயர் வாங்கி உள்ளார். வடநாட்டு பத்திரிகை கூட தமிழ் மாநிலம் தான் நம்பர் ஒன்மாநிலம், நம்பர் ஒன் முதல்வர் ஸ்டாலின் தான் என்று பாராட்டுகிறது.

ஒரு கட்சியின் மாநில தலைவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளார். அது பழைய படத்தில் வரும் ஜோக் போல் ஒருவர் ஆயிரம், மற்றவர் 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம் என்று கூறுவார்கள். அதுபோல் சொல்லி இருக்கிறார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொத்து மதிப்பு 1023 கோடி ரூபாய் என கூறியுள்ளார். அதை நிரூபிக்கவில்லை என்றால் 500 கோடி ரூபாய் அபராதம் தர வேண்டும் என கட்சியில் இருந்து அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

1023 கோடி ரூபாய் சொத்து இருத்தால், நீயே அதை விற்று கொடு. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் அரசு பள்ளிகள் உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டரை லட்சத்திற்கு அந்த பணத்தை வைத்து புத்தகம் வாங்கி கொடுக்கிறேன். மக்களை திசை திருப்புவதற்காக அவர் வாய்க்கு வந்ததெல்லாம் கூறுகிறார். திராவிட மாடல் ஆட்சி என்று கூறி மக்கள் எல்லோரையும் கலைஞரின் மகன் ஒன்றிணைத்து வருகிறாரே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக வாயில் வந்ததை எல்லாம் சொன்னால் 100 பேரில் 10 பேராவது நம்ப மாட்டானா என்று அரசியல் செய்கிறார்.

இது போன்று விமர்சனம் வதந்தி பரப்புபவர்களுக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டாம் என முதலமைச்சர் கூறி இருக்கிறார். மக்களுக்காக பணியாற்றும் வேலையை அமைச்சர்கள் பார்க்க வேண்டும், இதுபோன்ற காமெடியனுக்கு எல்லாம் பதில் சொல்லும் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் கூறியுள்ளார்’’ என்று சீறியிருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

இதற்கிடையே காவேரி மருத்துவமனை தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டமு. ‘‘அட ஏங்க நீங்க வேற, காவேரி மருத்துவமனையை 7 பேர் கூட்டாக நடத்தி வருகிறார்கள் என்றும் எனது மருத்துவமனை என்றால் அண்ணாமலையிடம் சொல்லி அதை மட்டும் வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்க’’ என கூலாக நேரு கேட்டுக்கொண்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal