‘அந்த’ மாதிரி படங்களை காட்டி ஒரு டாக்டரை மிரட்டி பணம் பறிக்க முயன் பெண் உள்பட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த டாக்டரின் மருத்துவமனைக்கு சம்பவத்தன்று ஒரு பெண் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவர் டாக்டரிடம் மருந்து-மாத்திரைகள் வாங்கி விட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு சில நாட்கள் கழித்து அந்தப் பெண், டாக்டருக்கு போன் செய்து தனது உடல் நலம் மோசமாக உள்ளதாகவும், வீட்டிற்கு வந்து பார்க்குமாறும் கூறி உள்ளார். இதனை நம்பிய டாக்டர், அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அவர் சிகிச்சை அளித்து விட்டு திரும்பிவிட்டார்.

இந்நிலையில் அந்தப் பெண், மீண்டும் டாக்டரை வரவழைத்துள்ளார். அப்போது தன்னுடன் டாக்டர் இருப்பது போன்ற படங்களை காட்டி மிரட்டி உள்ளார். இதனை பார்த்து டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். அந்த பெண் படங்களை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று கூறி உள்ளார். அப்போது அங்கு பெண்ணுக்கு ஆதரவாக ஒருவர் வந்துள்ளார். அவரும் டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஜி.பே. மூலம் டாக்டரிடம் இருந்து ரூ.45 ஆயிரத்தை பறித்துள்ளனர்.

மேலும் அவரது கார் சாவியையும் பறித்து வைத்துக்கொண்டனர். இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு அந்த 2 பேரும், டாக்டருக்கு போன் செய்து மேலும் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான டாக்டர், இது பற்றி போலீசில் புகார் செய்தார். அதில், தன்னை சிகிச்சைக்காக வீட்டுக்கு வரவழைத்த பெண், தான் சிகிச்சை அளித்த போது, அதனை ஆட்டோ டிரைவர் முகமது அமீன் என்பவர் மூலம் படம் பிடித்து பின்னர் பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி கூடலூரை சேர்ந்த நசீமா மற்றும் அவரது நண்பர் முகமது அமீன் ஆகியோரை கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், பணம் பறித்தவர்கள் போனில் உள்ள வீடியோ மற்றும் போட்டோக்கள் சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆய்வு செய்யப்படும் என்றனர்

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal