கடந்த 14-ந்தேதி தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு உடன் பிறப்புக்களையே ‘வாய்’ பிளக்க வைத்தார் அண்ணாமலை!

தி.மு.க.வின் சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, ‘கடந்த காலங்களில் தமிழகத்தை ஆண்ட கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் படிப்படியாக வெளியிடப்படும்’ என்றார்.

அண்ணாமலையின் இந்தப் பேச்சு, தி.மு.க.வினரை அதிர வைத்ததோ இல்லையோ, அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நேற்று எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலை பற்றி கேள்வி கேட்டதற்கு, ‘அவரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். 50 ஆண்டு காலமாக அரசியல் செய்துவருகிறேன். அரசியலில் அடிப்பட அறிவு இருக்க வேண்டும். அதே போல் முதிர்ந்த அரசியல் தலைவர்களைப் பற்றி கேளுங்கள்’ என அண்ணாமலைக்கு எதிராக கடுமையாக சாடினார்.

எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை மீது இவ்வளவு கோபமாக இருக்கக் காரணம் என்ன என மூத்த அரசியல் விமர்சகர் ஒருவரிடம் பேசினோம்.

‘‘சார், தி.மு.க.வினரின் சொத்துப்பட்டியல் என்பது எல்லோரும் அறிந்ததே… ஒரு சில விஷயங்கள்தான் புதிதாக இருக்கிறதே தவிர… மற்றவை ‘பழசு’தான். சர்க்காரியா கமிஷனே தி.மு.க.வைப் பார்த்து வியந்த நிலையில், வருமான வரித்துறை என்ன செய்துவிடப் போகிறது. அதற்கான கணக்குகளை எல்லாம் ‘இந்நேரம்’ வைத்திருப்பார்கள்.

இல்லாவிட்டால், இத்தனை ஆண்டுகள் கழித்து சொத்துப்பட்டியலை வெளியிடும் அண்ணாமலை, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு தொடர வேண்டியதுதானே, ஏற்கனவே, தி.மு.க.வினர் சிலர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு இருக்கிறது. சிலர் வழக்குகளில் இருந்து விடுபட்டிருக்கின்றனர்…

அ.தி.மு.க. பக்கம் திரும்புங்கள்… கடந்த கால ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், உதய் மின் திட்டம், நிலக்கரி கொள்முதல் என அனைத்திலும் பல ஆயிரம் கோடிகள் கமிஷன் அடித்ததாக அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க.வினரே புள்ளி விபரங்களுடன் அறிக்கை வெளியிட்டனர்.

‘மத்திய அரசின் உதவியுடன் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் முறைகேடு நடந்தால், அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அண்ணாமலை கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் கடந்த ஆட்சிகாலத்தில் அசைக்க முடியாத சக்திகளாக விளங்கிய எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் மீதுதான் ‘மேலிடத்தின்’ பார்வை விழுந்திருக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு மழையிலேயே… எல்லாம் ‘காணாமல்’ போய்விட்டது. அதே போல், நிலக்கரி இறக்குமதியில் ‘கைமாறிய’ ஆதாரமும் அண்ணாமலையிடம் சிக்கியிருக்கிறதாம். இதனை வைத்துக் கொண்டு, அவர்களின் அரசியல் எதிர்காலமே கேள்விக் குறியாக்கிவிடும் நிலையை ‘மேலிடம்’ நினைத்தால், அடுத்த நிமிடமே செய்துவிட முடியும்’’ என்றவர்,

அடுத்து சொன்னதுதான் அதிர்ச்சி ரகம், ‘‘ பசையுள்ள இருதுறைகளை வைத்திருந்த தங்கமணி, வேலுமணி இருவரும், தங்கள் மீதான பி.ஜே.பி.யின் கோபப் பார்வையிலிருந்து வெளிவர, அக்கட்சியில் இணைவதற்கு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம். அதுவும் அண்ணாமலை அடுத்த பட்டியலை வெளியிடுவதற்குள், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இரு ‘மணி’களும் காவித் துண்டை தோளில் போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வையும் பா.ஜ.க. உடைக்க தயாராகிவிட்டது.’’ என்றார்.

அடுத்து பேசிய ஒருவர், ‘‘பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்கிறாராம். காரணம், தென் சென்னை தொகுதியில் மீண்டும் தனது மகனை போட்டியிட வைக்க நினைக்கிறாராம். வெற்றி பெறுகிறோமோ இல்லையோ… தேர்தல் செலவுக்கு எடப்பாடியார் கொடுக்கும் சில ‘சி’க்களை அப்படியே அமுக்கிவிடலாம் என்ற நினைப்பில் பி.ஜே.பி.யுடன் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டாம்’’ என்கிறாராம்.

ஆக, மொத்தத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து இரு ‘மணி’கள் உள்பட முக்கியத் தலைகளை பா.ஜ.க.வில் ஐக்கியமாக வைப்பதில் ‘ஐ.பி.எஸ்.’ குறியாக இருக்கிறாராம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal