ஒரு அரசியல் கட்சிக்கு ஆணிவேர் என்பது கிளைக் கழகம்தான்! தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்குதான் கிழக்கழக நிர்வாகிகள் இருக்கிறார்கள்!

தமிழகத்தைப் பொறுத்தவரை குக்கிராமம் முதல் மாநகரம் வரை நிர்வாகிகள், தொண்டர்கள் இருக்கும் இயக்கங்கள் தி.மு.க., அ.தி.மு.க. என்பதால்தான், மற்ற கட்சிகள் இரு கட்சிகளுடன் கூட்டணியை வைத்து இதுநாள் வரை தேர்தலை சந்தித்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க., வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தயாராகி வருகிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், சமீபத்தில் திமுகவின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில் அதிமுகவிற்கு எதிராகவும் சில விஷயங்களை அண்ணாமலை பேசினார்.

அவர் தனது பேட்டியில், ‘‘ஊழல் பட்டியலில் திமுகவிற்கு எதிராக பற்றி மட்டும் பேச மாட்டேன். ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றால் அடிப்படையை அப்படியே எதிர்க்க வேண்டும். அடி ஆழத்தில் இருந்து எதிர்க்க வேண்டும். திமுக பைல்ஸ் என்பது இப்போது முடிய போவது இல்லை. இது பார்ட் ஒன்றுடன் முடியாது. தமிழ்நாட்டில் எந்த கட்சி எல்லாம் இதுவரை ஆட்சி செய்து இருக்கிறதோ அந்த கட்சி எல்லாம் பற்றி பேசுவோம். அத்தனை கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசுவோம்’’என்று கூறினார்.

அவரின் இந்த பேட்டி சர்ச்சையான நிலையில்தான் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட பாஜக தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது அதிமுக கூட்டணி இல்லாமல் போட்டியிட அவர் திட்டமிட்டு வருகிறாராம். இதை மனதில் வைத்தே, பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன்.

தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன். கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன்’’ என்றார்.

அண்ணாமலையின் ஆவேசம் சரியானதுதான். ஆனால், உள்ளுக்குள் விஷயம் இருக்கிறதா என்றால், இல்லை. காரணம், மாநில அளவில் நிர்வாகிகள் இருக்கிறார்கள். மாவட்ட அளவில் நிர்வாகிகள் இருக்கிறார்கள், நகர்ப்புற அளவில் சொல்லிக் கொள்ளும்படியான நிர்வாகிகள் இருக்கிறார்கள். ஒன்றியம், கிளைக்கழகத்தில் பொறுப்பில் இருப்பவர்களைத் தவிர, சொல்லிக் கொள்ளும் படியாக யாரும் இல்லை. ஒரு கட்சிக்கு ஆணிவேர கிளைக் கழக நிர்வாகிகள்தான், தமிழகத்தில் எத்தனை கிழக்கழகங்களில், பா.ஜ.க.விற்கு கிளைச் செயலாளர்கள் இருக்கிறார்கள்? ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பதை அண்ணாமலை விரைவில் உணர்வார்’’ என்றனர்!

அண்ணாமலையின் அரசியல் வியூகம் குறித்து, அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி செய்கிறது. அந்த அதிகாரத் தோரணையில் சொத்துப் பட்டியல்களை வெளியிட்டிருக்கிறார் அண்ணாமலை. அடிக்கடி அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு விஷயத்தைச் சொல்வார், ‘பா.ஜ.க.விற்கு எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை அண்ணாமலை சொல்லவேண்டும்’ என்று! அதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் இருக்கிறது.

தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும்… எப்படி வியூகம் வகுக்க வேண்டும் என்பதில் கில்லாடி செந்தில் பாலாஜி… ஆனால், அண்ணாமலை தன்னை இன்னும் ஐ.பி.எஸ். அதிகாரியாகவே நினைத்துக்கொண்டு அரசியல் செய்து வருகிறார். எடப்பாடி பழனிசாமிக் கூட நேற்று, ‘அண்ணாமலைக்கு அடிப்படை அரசியல் தெரியவில்லை’ என்று பேசியிருக்கிறார். இப்படி, அரசியலில் நெளிவு சுளிவு தெரியாமல், சொத்துப் பட்டியலையும், ஊழலையும் வெளிக்கொணர்ந்தால் ஆட்சிக்கு வந்து விடமுடியுமா? ஆடியோவையும்… வீடியோவையும் வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடித்துவிட முடியுமா?

தான் ஒரு தூய்மையானவன் என்கிறார் அண்ணாமலை! தற்போது கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக பி.ஜே.பி. தலைமையால் நியமிக்கப்பட்டிருக்கிறார். கர்நாடகத்தில் பி.ஜே.பி.யினர்தான் ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள். அவர்களது ஊழல்களை அண்ணாமலைக்கு வெளியிட துணிவு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் (இழு பறியாக இருக்கும் நிலையில்) பா.ஜ.க. எப்படி ஆட்சியைப் பிடித்தது என்பதை உலகமே அறியும்!

தமிழகத்தில் ஜெ. மறைவிற்குப் பிறகு, பி.ஜே.பி. அ.தி.மு.க.வை எப்படியெல்லாம் உடைத்து அரசியல் செய்தது என்பது சிறு பிள்ளைகளுக்குக் கூட தெரியும்! அப்படியிருக்கும் போது திடீர்னு ‘நேர்மை.. நியாயம்..!’ என்று பேசினார் அண்ணாமலைக்கு ஆதாவாக மக்கள் நிற்பார்களா? அவரது நடைபயணத்திற்கு 49 ஆயிரம் பேர் பதிவு செய்ததை ஒரு பெரிய விஷயமாக சொல்கிறார். தமிழகத்தில் எத்தனை கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற கணக்காவது அண்ணாமலைக்கு தெரியுமா? அண்ணாமலை அரசியலில் இன்னும் கற்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்பதை கர்நாடக சட்டசபைத் தேர்தலும், வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலும் உணர்த்தும்’’ என்றனர்.

‘பில்ட்டிங் ஸ்ட்ராங்க்… ஆனா பேஸ் மட்டம் வீக்..’ என்று தான் அண்ணாமலையின் அரசியல் இருக்கிறது! முதலில் கிளைக்கழகங்களுக்கு நிர்வாகிகளை நியமித்து, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்திவிட்டு அ.தி.மு.க, தி.மு.க.வை எதிர்ப்பதுதான் ‘வலுவான’ அரசியல் தலைவருக்கான அடையாளம் என்பதை அண்ணாமலை எப்போது உணர்வார்..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal