அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதிவி நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்ட சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்க வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இந்தநிலையில் அதிமுகவில் இருந்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. இது தொடர்பாக அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தல் ஆணையம் அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளாமல் இருந்தது. இதன் காரணமாக தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைக்க ஓ.பன்னீர் செல்வத்தின் கையெழுத்தும் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதானல் பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட திருத்தப்பட்ட அ.தி.மு.க சட்டவிதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிடும் வகையில், கட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் அங்கீகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் பிரதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுவதால் வழக்கை விசாரிக்க கூடாது என ஓபிஎஸ் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் அதிமுக சட்ட விதிகளின் திருத்தங்களை ஏற்பது குறித்து 10 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் இன்றைய விசாரணையின் போது தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 10 நாட்களில் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தின் நிலை தெரிந்து விடும் என கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal