இந்தியாவின் முப்படைகளில் பணியாற்றி நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. ராணுவம் தனது படைபிரிவுகளுக்கு தேவையான வீரர்களை அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு நிரப்பி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணையும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள்.

முப்படைகளுக்கும் தற்காலிக அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் திட்டமான இதில், தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்ற முடியும். இந்த வீர்களில் 25 சதவீதம் பேர் தகுதியின் அடிப்படையில் நிரந்தர பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். பிற வீரர்கள் ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியாது.

இந்த திட்டத்தின் கீழ் 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் பணியில் சேர முடியும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் ராணுவ பணியில் தயாராகி வந்த இளைஞர்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேரும் இளைஞர்களின் வயது வரம்பு 23 ஆக அதிகரித்தது உள்ளிட்ட சில சலுகைகளை அறிவித்தது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணி நிரந்தரம் இல்லை, ஓய்வூதியம் இல்லை என்பதால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.. இந்த திட்டம் வெளிநாடுகளில் தோல்வி அடைந்தது என்பதோடு தேச பாதுகாப்புக்கு கூட ஆபத்தாக மாறும் என்ற வாதங்களை முன்வைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அதேபோல், இந்தத் திட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அக்னிபாத் திட்டம் சட்டபடி செல்லுபடியாகும் எனக்கூறி கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. மத்திய அரசு நன்கு ஆலோசித்து கொண்டு வந்துள்ள கொள்கை முடிவு என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து அது செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுக்களை தள்ளுபடி செய்தது. இதன்படி, அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal