கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு விட்டது. இந்த நிலையில்தான் இன்று மாலை, பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் களத்தில் இருப்பதால் 3 முனை போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் கட்சி முதல்கட்டமாக 124 தொகுதிக்கும், 2-வது கட்டமாக 41 இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. மதசார்பற்ற ஜனதாதளம் 93 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. பா.ஜனதா இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என்று முன்னாள் முதல்-மந்திரியான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

170 முதல் 180 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலில் வெளியிடப்படும் என்று அவர் டெல்லியில் இன்று காலை நிருபர்களிடம் கூறினார். பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal