ஆளுநருக்குப் பாதுகாப்பாக கலைஞர் கொண்டு வந்த சட்டத்தை நீக்கம் செய்துவிட்டு, ஜெயலலிதாவைப் போல், ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். சட்டசபையில் இன்று காலை தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

இதன் மீதான விவாதம் தற்போது நடந்து வருகிறது. சட்டசபை மாண்புகளை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார் . சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதி உள்ளது. சட்டசபையில் ஆளுநர் பற்றி விவாதிக்க கட்டுப்பாடு உள்ளது. அதனால் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றால், அதற்காக விதிகளை தளர்த்த வேண்டும். இதையடுத்து இன்று அவையில் ஆளுநரை பற்றி விவாதிக்க கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானத்தை கொண்டுவந்தார் அவை முன்னவர் துரைமுருகன். ஸ்டாலினின் உரைக்கு வழி தரும் விதமாக இன்று இரண்டு விதிகள் தளர்த்தப்பட்டது.

அதன்படி விதிகள் 92/7 மற்றும் 287 ஆகிய விதிகள் தளர்த்தப்பட்டன. 92/7 விதி என்ன சொல்கிறது? – ஆளுநரையே குடியரசுத் தலைவரையோ சட்டசபையில் விமர்சனம் செய்ய கூடாது. 287 விதி என்ன சொல்கிறது? -& எந்த விதியையும் நீக்கலாம். ஆனால் 92/7 விதியை நீக்க முடியாது என்று சொல்கிறது. அதாவது விதி எண் 287 என்பது 92/7 விதிக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கிறது.

இந்த இரண்டு விதிகளை நீக்கினால்தான் அவையில் ஆளுநருக்கு எதிரான முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்ற முடியும். 1995ல் சென்னா ரெட்டி காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் இப்படி செய்துள்ளார். அதாவது ஆளுநருக்கு எதிராக அப்போது தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் அப்போது 92/7 விதி மட்டும் நீக்கப்பட்டது. ஏன் என்றால் அப்போது 287 விதி இல்லை. 1999ல் முதல்வர் கருணாநிதி ஆளுநர் பதவிக்கு ஒரு வித பாதுகாப்பு மற்றும் மரியாதையை வழங்க வேண்டும் 287 சட்டத்தை கொண்டு வந்தார். ஆளுநருக்கு இது ஒரு கூடுதல் பாதுகாப்பை கொடுத்தது. தற்போது இந்த இரண்டு சட்டங்களையும் நீக்கிவிட்டு முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த விதிகளை நீக்க சபையில் உள்ளவர்களில் 4ல் மூன்று பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை. பொதுவாக குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும். அதாவது ஆதரிப்பவர் ஆம் என்க.. எதிர்ப்பவர் இல்லை என்க என்று கூறுவார். இதை எதிர்த்து குரல் வந்தால்.. எதற்கு ஆதரவாக குரல் வருகிறது என்று பார்க்கப்படும். ஆனால் இன்று ஆளுநர் பற்றி விவாதிக்க கூடாது என்ற விதியை தளர்த்தும் தீர்மானத்திற்கு குரல் வாக்கெடுப்பிற்கு பதிலாக உறுப்பினர்கள் எழுந்து நிற்பார்கள். அவர்களின் தலைகள் எண்ணப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதாவது எதிர்ப்பவர்கள் எழுந்து வாக்களிக்க வேண்டும். ஆதரிப்பவர்கள் எழுந்து தனியாக வாக்களிக்கலாம். நடுநிலை முடிவில் இருப்பவர்களும் அப்படி வாக்களிக்கலாம். இவர்களின் தலைகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 2017க்கு பின் முதல்முறையாக இன்று இப்படி தமிழ்நாடு சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எப்போதும் தலை வாக்கெடுப்பு நடத்தும் போது அவை கதவுகள் அடைக்கப்படும். இன்றும் இதன் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்புக்காக பேரவை கதவுகள் அடைக்கப்பட்டன.

இதன் மூலம் ஸ்டாலின் – ஆர் என் ரவி இடையிலான மோதல் அடுத்த லெவலை அடைந்து உள்ளது. 1993 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் ஆளுநராக சென்னா ரெட்டி இருந்தார். அப்போது சட்டசபையில் இதேபோல் ஆளுநருக்கும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு மோதல் ஏற்பட்டது. அதோடு சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோதுதான், தன்னிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டினார். இதனால் சட்டசபையில் மிகப்பெரிய மோதலே அப்போது வெடித்தது.

அதன்பின் தமிழ்நாடு அரசியலில் ஆளுநருக்கும்,- முதல்வருக்கும் இடையில் சட்டசபையிலேயே மோதல் வெடித்தது இல்லை. முக்கியமாக மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார் என்று கூறி சென்னாரெட்டி வாகன அணிவகுப்பைத் தடுத்து நிறுத்த வைத்தார் ஜெயலலிதா. திண்டிவனம் அருகே அவரை வழிமறித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கடும் அழுத்தம் கொடுத்தனர். ஆளுநர் சென்னா ரெட்டி அப்போதெல்லாம் வெளியே வருவதே பெரிய பிரேக்கிங் செய்தியாக இருந்தது. மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர் விருந்துகளை ஜெயலலிதா புறக்கணித்தார்.

அதிமுக எம்எல்ஏக்களை மட்டுமின்றி அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு போகக் கூடாது என்று கடும் உத்தரவும் பிறப்பித்தார். ஜெயலலிதா சென்னா ரெட்டிக்கு பெரிய சிம்ம சொப்பனமாக இருந்தார்.

தற்போது முதல்வர் ஸ்டாலினும் ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக அதே ரூட்டை எடுத்து அதிர வைத்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal