கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், தற்போது 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் கொரோனா பிடியில் சிக்கிய மக்கள் தற்போது தான் மீண்டு வருகின்றனர். இந்தநிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த மாதம் கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது 35 ஆயிரத்தை கடந்துள்ளது. தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் சரசர வென உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் நேற்று முன் தினம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32ஆயிரத்து 814 இருந்த நிலையில், இன்று காலை 35,199 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் மட்டும் 12 ஆயிரத்து 433 பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 369 பேருக்கு பாதிப்பு நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 1900 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருவதாக கூறப்படுகிறது. இருந்தபோதும் பெரிய அளவில் உயிர் இழப்பு இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லையென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இன்று மற்றும் நாளை கொரோனா சிறப்பு ஒத்திகையானது மேற்கொள்ளப்படவுள்ளது.

கொரோனா பரவல் கடந்த 2 வாரங்களாக நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், ஐகோர்ட்டுகளில் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகளை விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கடந்த வாரம் உத்தரவிட்டார். அதன்படி சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் இன்று (10-ந் தேதி) முதல் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்து உள்ளது.

நேரடியாக வழக்குகள் விசாரணை நடந்தாலும், வக்கீல்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள், பொதுநல வழக்குகளை தொடுத்து நேரடியாக ஆஜராகுபவர்கள் உள்ளிட்டவர்கள் முடிந்தவரை கொரோனா தொற்றை தடுக்கும் வகையிலும், கோர்ட்டு அறைகளில் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் வீடியோ கான்பரன்ஸ் முறையை பயன்படுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு பதிவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அதே போல் வழக்கு தாக்கல் செய்வதற்கும் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி மதுரை ஐகோர்ட்டில் பெரும்பாலான வழக்குகளின் விசாரணை வீடியோ கான்பரன்ஸ் முறையிலேயே இன்று நடைபெற்றது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal