சென்னை நங்கநல்லூரில் ஒருவரை காப்பாற்றப் போய் 5 அர்ச்சகர்கள் அடுத்தடுத்து பலியான சம்பவம்தான் பங்குனி உத்திரத்தன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை நங்கநல்லூர் அருகே தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் உயிரிழந்த சூர்யா,(24), ராகவ் ((22), ராகவன் (18), யோகேஸ்வரன் (23), வணேஷ் (20) உள்பட ஐந்துபேரின் உடல்கள் மீட்கப்பட்டு, ஐந்து உடல்களும் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விபத்து நடந்த மூவரசம்பட்டு தர்மலிங்கேஸ்வரர் கோயில் குளம் பகுதியில் சென்னை மாநகர கமிஷ்னர் சங்கர் ஜிவால் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். சுமார் 25 அடி ஆழம் கொண்ட இந்த குளத்தில் சேறு அதிகமாக இருந்துள்ளது. இதுதான் இந்த கோர விபத்துக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் கூறுகையில், ‘‘தீர்த்தவாரி நிகழ்ச்சியில் அர்ச்சர்கள் அனைவரும் சாமியை குளத்தில் குளிப்பாட்டினர். பின்னர் குளத்து நீரில் மூழ்கி எழுந்தனர். குளத்தில் மூழ்கி எழுந்திருக்கும் போது, மூன்று முறை எழுந்திருக்க வேண்டும். அப்படி எழுந்திருக்கும் போது மூன்றாவது முறை எழ முயன்ற போது ஒருவருக்கு கால் மாட்டியிருக்கிறது. அந்த அர்ச்சகரை மீட்க செல்லும் போது தான், அடுத்தடுத்து 4 பேர் நீரில் மூழ்கி உள்ளனர். ஒட்டுமொத்தமாக நீரில் அடுத்தடுத்து ஐந்து அர்ச்சர்கள் தண்ணீரில் உள்ள சேரில் சிக்கி நீந்த முடியாமல் உயிரிழந்தனர்’’ என்று கூறினர்.

சம்பவம் குறித்து அங்கிருந்த ஒருவர் கூறுகையில், ‘‘இந்த குளத்தை பொறுத்தவரை இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு தான் பராமரித்தார்கள். மக்கள் இங்கு நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். அம்மாவாசையின் போது மக்கள் திதி கொடுப்பார்கள். மக்கள் தினமும் பயன்படுத்தும் குளம் தான் இது. இங்கு வருடம் வருடம் தீர்த்தவாரி நடக்கும். அப்படித்தான் நடந்தது. இந்த சூழலில் இப்படி ஒரு சோகம் நிகழந்துள்ளது’’ என்றார்.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ‘‘இந்த குளம் 25 அடி ஆழம் கொண்டது. குளத்தை சுத்தப்படுத்தி தூர்வாரி பராமரித்து வருகிறோம். இவ்வளவு ஆழமான குளத்தில் இந்த முடிவை எப்படி எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. எல்லோருக்கும் நீச்சல் தெரியுமா தெரியாதா என்பது தெரியவில்லை. இந்த மாதிரி நிகழ்ச்சி பண்ணும் போது காவல்துறை பாதுகாப்புடன் செய்திருக்க வேண்டும். அப்படி செய்தார்களா என்பது தெரியவில்லை’’ என்றார்.

இதேபோல் இன்னொருவர் கூறுகையில், ‘‘குளத்தை சுத்தம் செய்து முறையாக பராமரித்து வருகிறார்கள். எனினும் குளத்தில் யாரும் இறங்கக்கூடாது என்று எங்கள் அசோசியேசனில் இருந்து அறிவிப்பே விட்டுள்ளோம். இங்கு நடைபயிற்சி மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். நிறைய பேர் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள்.ஒருவர் வழுங்கி உள்ளே விழுந்துள்ளார், அடுத்தடுத்து அவரை காப்பாற்ற போய் இப்படி ஆகி இருக்கிறது’’ என வேதனையுடன் தெரிவித்தார்!

‘கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம்’ செய்வதுதானே தமிழகர்கள் காலம் காலமாக பின்பற்றும் நடைமுறையாக இருக்கிறது..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal