தி.மு.க. இளைஞரணிக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். குறிப்பாக சிபாரிசுகளுக்கு இடம் கொடுக்காமல், ‘செயல்வீரர்’களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக அறிவாலயத்தில் இருந்து தகவல்கள் வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்த போது, கட்சி நிர்வாகிகளின் மகன்கள், மா.செ.க்களின் மகன்கள், அமைச்சர்களின் மகன்கள் என இளைஞரணியில் கோலோச்சி வந்தனர். ஆனால், உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிக்கு பொறுப்பேற்ற பிறகு, ‘கட்சிக்கு என்ன செய்திருக்கிறீர்கள்’ என்ற ஒற்றை வரியைக் கேட்டுதான் தேர்வு செய்து வருகிறாராம். அதாவது, பண பலம், படை பலத்தை தாண்டி, ‘உங்கள் உழைப்பின் பலம் என்ன?’ ‘அதற்குத்தான் பதவி!’ என்கிற ரீதியில் இளைஞரணிக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கிறார்.
தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு குறித்து, மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ‘‘சார், இதற்கு முன்பெல்லாம் இளைஞரணி பதவிக்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களின் ‘எடுபிடி’களாக இருப்பவர்களை நியமனம் செய்துவிடுவார்கள்! ஆனால், தற்போது அப்படி நடைபெறவில்லை. சமீபத்தில்தான் தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர்களாக தூத்துக்குடி எஸ்.ஜோயல், ரகு, இளையராஜா, அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதில் எஸ்.ஜோயலைத் தவிர மற்ற அனைவரும் புதியவர்கள்.
துணைச் செயலாளர்கள் நியமனத்தில் முதல்வரும், தனது தந்தையுமான ஸ்டாலின் கொடுத்த லிஸ்டையே ஓரங்கட்டிவிட்டார் உதயநிதி ஸ்டாலின். குறிப்பாக அமைச்சர்கள் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்துக்கும், எ.வ.வேலு தனது மகன் கம்பனுக்கும், கே.என்.நேரு தனது மகன் அருண் நேருவுக்கும், பொன்முடி தனது மகன் கௌதம சீகாமணிக்கும், எம்.பி., டி.ஆர்.பாலு தனது மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கும் ‘சிபாரிசு’ மூலம் உதயநிதியிடம் பரிந்துரைத்திருந்தனர்.
ஆனால், உதயநிதி ஸ்டாலின் சிபாரிசை ஏற்றுக்கொள்ளாமல், கட்சிக்கு விசுவாசமாகவும், உண்மையாகவும் உழைப்பவர்களை தேர்ந்தெடுத்து பதவி கொடுத்திருக்கிறார்! இந்த நிலையில்தான் இளைஞரணிக்கு மாவட்ட அமைப்பாளர்கள் தேர்வு மண்டலம் வாரியாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சை மண்டலத்தில் தேர்வு நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர். அங்கு நேர்காணலுக்கு வந்தவர்களிடம், ‘கட்சிக்கு என்ன செய்திருக்கிறீர்கள்..? எத்தனை வருடமாக கட்சியில் இருக்கிறார்கள்..?’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்..?’ ‘உங்களுடைய தொழில் என்ன..?’ என்று மட்டும்தான் கேட்டிருக்கிறார் உதயநிதி! அவர்களது அரசியல் பின்புலத்தை கேட்கவில்லை!
தவிர, 40 வயதுக்கு மிகாமல் இருப்பவர்களை மட்டும் இளைஞரணிக்கு தேர்வு செய்து வருகிறார். 40 வயதுக்கு மேல் ‘சிபாரிசு’டன் வருபவர்களை ‘போட்டோ’ மட்டும் எடுத்துக்கொண்டு அனுப்பி வைத்துவிடுகிறாராம். இந்த நிலையில்தான் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பதவிக்கு அமைச்சர்கள் தங்களுடைய வாரிசுகளுக்கு காய்நகர்த்தியருக்கிறார்களாம்.
அதாவது, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சி.வி.கணேசன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகியோரும் தங்களது வாரிசுகளுக்கு மாவட்ட அமைப்பாளர் பதவி வாங்கிவிட வேண்டும் என்று துடித்திருக்கிறார்கள். ஆனால், இதில் தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும்தான் பதவி கிடைக்கும், ‘வாரிசு’ அடிப்படையில் கிடைக்காது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின்!
அதே போல், மாவட்டச் செயலாளர்கள் தென்காசி சிவ பத்மநாபன் (இவரது மகனை உள்ளூர் உடன் பிறப்புக்கள் சின்னவர் என்றுதான் அழைப்பார்களாம்), கன்னியாகுமரி சுரேஷ்ராஜ்ன், கம்பம் ராமகிருஷ்ணன், திருவள்ளூர் கோவிந்தராஜ் ஆகியோரும் காய் நகர்த்தி வருகிறார்களாம். ஆனால், இதில் தகுதியானவர்களுக்கு மட்டுமே பதவி என்பதில் உதயநிதி உறுதியாக இருக்கிறார்’’ என்றனர்.
தி.மு.க. இளைஞரணியில் இருக்கும் ஒரு சிலரிடம் பேசினோம். ‘‘சார், உதயநிதி ஸ்டாலின் வெளியில் பார்ப்பதற்கு மட்டுமே புன்சிரிப்புடன் இருக்கிறார். ஆனால், நிர்வாகிகள் நியமனம், கட்சி விவகாரங்களில் மிகவும் சீரியஸாக முடிவெடுக்கிறார். முதல்வர் ஸ்டாலின் கூட ‘போனால் போகட்டும்’ என்று விட்டு, கட்சியில் உள்ள சீனியர்களின் வாரிசுகளுக்கு பதவி கொடுத்து விடுவார். ஆனால், உதயநிதி ஸ்டாலின் கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்துவதிலும், தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் தெளிவாக சில முடிவுகளை எடுத்து வருகிறார். காரணம், தி.மு.க.வின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டுதான் இவ்வளவு சீரியஸான முடிவு எடுக்கிறார்!
இப்படி இருந்தால்தான், கட்சியின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்து, எதற்கும் அஞ்சாமல் சில முடிவுகளை எடுத்து வருகிறார். கட்சியின் எதிர்காலமான இளைஞரணியினரின் தேர்வில், உதயநிதியின் செயல்பாடுகள் வியக்க வைக்கிறது. இளைஞரணிக்கு புது ரத்தம் பாய்ச்சுவதோடு, வரும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. எலெக்ஷனில் இளைஞரணிக்கு முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறாராம் உதயநிதி. இம்மாதம் இறுதிக்குள் இளைஞரணி நிர்வாகிகள் பட்டியல் வெளியாகிவிடும். அந்த பட்டலியல் இருந்தே உதயநிதியின் செயல்பாடுகளை மூத்த நிர்வாகிகள் முதற்கொண்டு, அடிமட்ட தொண்டர்கள் வரை புரிந்துகொள்வார்கள்’’ என்றனர்!
கட்சி விவகாரங்களில் தனது தாத்தா கலைஞரையே உதயநிதி மிஞ்சிவிடுவாரோ…?