அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘இனி ஏறுமுகம்’தான் என பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் தொடங்கி பல்வேறு வழக்குகளுக்கு பிறகு எடப்பாடி தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளராக நிலைநிறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, உயர்நீதிமன்றத்தில் வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் மறு அறிவிப்பாக வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடக பொதுத்தேர்தல், அதிமுகவிற்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு உள்ளிட்டவை பற்றி விவாதிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செயற்குழு கூட்டம் கூடும் தேதியின் அறிவிப்புக்கும் கூட்டம் நடக்கும் நாளுக்கும் இடையே குறைந்த பட்சம் 7 நாள் இடைவெளி இருக்க வேண்டும் என்பது அதிமுகவின் சட்டவிதி. கடந்த முறை அந்த இடைவெளி இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. தற்போது 10 நாள் இடைவெளி இருக்கிறது. இந்த தேதியை பிரபல ஜோதிடர் ஒருவர் குறித்து கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடக்குமா நடக்காதா? நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கும்? என்று அதிமுகவினர் கலக்கத்தில் இருந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததோடு எடப்பாடி பழனிசாமியும் பொதுச்செயலாளர் பதவியையும் பெற்றுவிட்டார். இந்த நிலையில் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்ததற்கு காரணம் அதிமுகவில் ஒற்றைத்தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றுவதில் இருந்து பொதுக்குழுவுக்கு நாள் குறித்து கொடுத்தது வரை பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூன் 21ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றினால் கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அனைத்து நடக்கும் என்று ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்து கூறியதாகவும் அவர் சொன்னது போலவே பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் அதிமுகவினர் கூறியுள்ளனர்.

ஜூன் 21 2022 காலை 11.10 மணி முதல் 11.40 மணி வரை சிம்ம லக்னம் லக்கனாதிபதி லாப ஸ்தானத்தில் லக்கனத்திற்கு சனிபகவான் ஏழில் திக் பலம் அடைந்து மூலத்திரிகோண ஆட்சி பெறுகிறார் லக்கினத்திற்கு எட்டில் 9-க்குடையவர் 4 க்கு உடையவர் எட்டில் ஒரு கிரகம் பலமாக இருப்பது மிகுந்த நன்மை தரக்கூடிய நேரம். சூரியன் – தலைமை பொறுப்பை தாங்கும் சக்தி படைக்கக் கூடிய கிரகம் சனி – பொதுமக்கள் , கட்சி ரீதியில் பார்த்தால் அடிப்படை உறுப்பினர்கள் சனி திக்பலம் கொன்ற லக்கனத்தில் ஒரு தலைவர் பொறுப்பை ஏற்றார் நாளடைவில் அந்த தலைவருக்கு ஏகமனதாக தொண்டர்கள் ஆதரவு தருவார்கள்.

சனி வக்ரம் , வக்ர கிரகம் பார்வை பெற்ற லக்கனத்தில் ஒரு செயல் தொடங்கும் போது அந்தச் செயலை விடாப்பிடியாக பிடிவாதமாக முடிக்கக் கூடிய திறன் ஏற்படும் எந்த சூழ்நிலையிலும் பின்வாங்கல் நடக்காது. நாளை 60க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒரு கட்சியின் சார்பாக , அவருக்கு சாதகமாக தீர்மானம் இந்த நேரத்தில் போடப்பட்டால் உறுதியாக அந்த தீர்மானத்தின் பலனாக சம்பந்தப்பட்டவருக்கு அனேக நற்பலன்கள் கிடைக்கும்., இதுவரை புகழ்பெற்ற அந்தக் கட்சியில் பொன்மனச் செம்மல், அம்மா என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் என்ற வரிசையில் அந்த இடத்தை அடுத்ததாக உறுதி செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாலாஜிஹாசன்.

இதே போல வரும் 16 ஆம் தேதி அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாளையும் பிரபல ஜோதிடர்தான் குறித்து கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உகந்த நாள். சூரியன் மேஷ ராசியில் உச்சம் பெற்று ராகு புதனுடன் இணைந்திருக்கிறார். குரு பகவான் மீன ராசியில் ஆட்சி நிலையில் இருக்க, கும்ப ராசியில் சனி, சந்திரன் சேர்ந்திருக்கின்றனர். ரிஷப ராசியில் ஆட்சி பெற்ற சுக்கிரன், மிதுன ராசியில் செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. அன்றைய தினம் ராஜ கிரகங்கள் சனி, குரு, சுக்கிரன் ஆட்சி பெற்றும் சூரியன் உச்சம் பெற்றும் பயணம் செய்யக்கூடிய சிறப்பான நாள். இந்த நாளில் கூடும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எடப்பாடி பழனிச்சாமியை அசைக்கமுடியாத தலைவராக உருவாக்கும் என்று ஜோதிடர் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரைக்கும் முக்கிய முடிவுகள் பற்றி பேசுவதற்காக பஞ்சமி, ஏகாதசி திதிகளை தேர்வு செய்வார். எடப்பாடி பழனிச்சாமியும் பல அறிவிப்புகளை ஏகாதசி நாளில் வெளியிட்டுள்ளார். அதே போல செயற்குழு கூட்டத்திற்கு தேர்வு செய்த நாளும் பெருமாளுக்கு உகந்த ஏகாதசி நாளாகும். சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி பாப விமோசனி ஏகாதசி என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அரசியல் களத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு இனி ஏறுமுகம்தான் என்கிறார்கள் ஜோதிடத்தை நன்கு அறிந்தவர்கள்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal