அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்ட திடீர் உத்தரவுதான் அக்கட்சியினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

அதாவது, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

‘‘கோடை வெயிலின் தாக்கத்தால் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் அதிகரித்து வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் வருங்காலங்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இச்சூழலில் சாலைகளில் செல்லும் பொதுமக்களை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் திறந்திட வேண்டுகிறேன். இந்தப் பணி, பாதசாரிகளுக்கும், இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கும் உதவியாக அமைந்திட வேண்டும். அதற்குத் தகுந்த இடங்களைத் தேர்வு செய்து தண்ணீர் மற்றும் நீர் மோர்ப்பந்தல்களை நிறுவிட வேண்டுகிறேன்’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அ.தி.மு.க.விலிருந்து அ.ம.மு.க.பிரிந்த போது சில முக்கிய நிர்வாகிகள் டிடிவி.தினகரனுடன் வந்தனர். அதன் பிறகு அவரது நடவடிக்கையால் தி.மு.க., அ.தி.மு.க. என சென்றுவிட்டனர். சில நிர்வாகிகள் வேறுவழியின்றி அவரிடம் இருக்கின்றனர்.

ஏற்கனவே, அ.ம.மு.க.விற்கு ஏராளமான பொருட்செலவு, பண செலவு என எல்லாவற்றையும் முடித்துவிட்டு, ‘தலையில் கை’ வைத்து உட்கார்ந்திருக்கும் நிலையில், டி.டி.வி. போட்டி ‘நீர்மோர் பந்தல்’ உத்தரவு அக்கட்சியினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

‘கட்சி நிர்வாகிகள் எப்படியிருக்கிறார்கள் என்று கண்டுகொள்வதில்லை. ஏற்கனவே சொத்துபத்துக்களை எல்லாம் விற்றுதான் கட்சியில் இருக்கிறோம். தலைமையில் இருந்து நிதி எதுவும் கொடுக்காமல், நிர்வாகிகளே எத்தனை நாளைக்கு செலவு செய்து கொண்டிருப்பது’ என கொந்தளிக்கின்றனர் அ.ம.மு.வினர்!

அ.ம.மு.க.வின் நிர்வாகிகள் மற்றும் கட்சியினரின் உணர்வுகளை டி.டி.வி. புரிந்துகொள்வாரா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal