முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.விலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கடந்த 2011&ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, வருவாய்த்துறை மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். பெருந்துறை தொகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவர். இவருக்கென அப்பகுதியில் தனிப்பட்ட முறையில் வாங்கு வங்கியும் உண்டு. சட்டசபையில் தோப்பு வெங்கடாச்சலம் பேசும் போது, ஜெயலலிதா அவர்கள் சிரித்துக்கொண்டே ரசித்துக் கேட்பதும் உண்டு.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில்தான் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா! அந்த தேர்தலில் சீனியர் அமைச்சர்களையெல்லாம், அதாவது செந்தில்பாலாஜி, நத்தம் விஸ்வநாதன், ஓ.பி.எஸ்., முன்னாள் கொறடா மனோகரன் உள்பட்ட முக்கிய தலைவர்களை, தி.மு.க.வில் அசைக்க முடியாத சக்திகளாக வலம் வருபவர்களுடன் மோத விட்டார். காரணம் கட்சிக்கு சீனியர்கள் உண்மையாக இல்லை என உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்தான்!

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார் தோப்பு வெங்கடாச்சலம், கிடைக்கவில்லை. இதனால், மனவருத்தத்தில் இருந்த தோப்பு வெங்கடாச்சலம், தி.மு.க. ஆட்சியமைந்தவுடன் தி.மு.க.வில் இணைந்தார். கொங்கு மண்டலத்தில் தி.மு.க. பலவீனமாக இருப்பதால், தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வளைத்தது தி.மு.க. தலைமை. ஆனால், தோப்பு வெங்கடாச்சலத்திற்கு மாநில அளவில் தி.மு.க.வில் பொறுப்பு கொடுத்தும், அதை ஏற்றுக்கொள்ளாமல் மவுனமாக இருந்த நிலையில்தான், தி.மு.க.விலிருந்து தோப்பு விலகுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தி.மு.க.விலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் விலக காரணம் என்ன என கொங்குவில் உள்ள சில மூத்த உடன் பிறப்புக்களிடம் பேசினோம். ‘‘சார், தோப்பு வெங்கடாச்சலம் மிகவும் எளிமையாக எல்லோரிடமும் பழகக் கூடியவர்! தொகுதி மக்களுக்காக ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் இணைந்த பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. அனைத்து இடங்களிலும் வென்றது.

தோப்பு வெங்கடாச்சலம் எங்கே மாவட்டச் செயலாளராகி நமக்கு போட்டியாக வந்துவிடுவாரோ என நினைத்த, அமைச்சர் முத்துசாமி, தோப்புவிற்கு முட்டுக்கட்டை போட ஆரம்பித்தார். அதாவது, தலைமை மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்க முன்வந்தும், இடையில் புகுந்து ‘அமைச்சர்’ கெடுத்ததாக தகவல்! இன்னும் சொல்லப்போனால், தி.மு.க.வில் ‘கோலோச்சி’ வந்த சுப்புலட்சுமி ஜெகதீசனையை இரண்டு ஒன்றியச் செயலாளர்களை வைத்து தி.மு.க.விலிருந்து வெளியேற்றியவர்தான் அமைச்சர்!

அப்படியிருக்கும் போது, தோப்புவை எப்படி மாவட்டச் செயலாளராக வளரவிடுவார். தற்போது, மா.செ.வாக இருப்பவர்கள் அமைச்சருக்கு கட்டுப்பட்டு, டம்மியாக இருப்பவர்கள்! அவர்களைத்தான் அமைச்சர் தட்டிக்கொடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.விலிருந்து விலகுவதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அடுத்த கட்சியில் இருப்பவர்கள் ஆளுங்கட்சியில் இணைவதுதான் வழக்கம். ஆனால், இங்கே எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். காரணம், தி.மு.க. தலைமைக்கு சரியான தகவலை யாரும் கொடுப்பதில்லை. இனியாவது தி.மு.க. விழிக்க வேண்டும்…. இதே நிலை நீடித்தால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு பகுதியில் மீண்டும் பலத்த அடிவாங்கும் தி.மு.க.!’’ என்றனர்!

ஆக, அடுத்து தோப்பு வெங்கடாச்சலம் அ.தி.மு.க.வில் இணைகிறாரா அல்லது பி.ஜே.பி.யில் இணைகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal