சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்வுக்கு தடைகேட்டு ஓ.பி.எஸ். தொடுத்த வழக்கில், ‘உடனடியாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது’ என நீதிபதிகள் தெரிவித்து விட்டனர். இதனால், ஓ.பி.எஸ்.ஸுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்தனர். அதன்படி 2 நாட்களுக்கு முன்பு, ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை இரு நீதிபதிகள் தொடங்கி நடந்தது.
அப்போது, ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றது. குறிப்பாக, தனி நீதிபதி முன்பு நடந்த விசாரணை குறித்து ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. ‘என்னை கட்சியிலிருந்து நீக்கியதில் சட்ட விதிமீறல் உள்ளதாக தனி நீதிபதி தெரிவித்திருக்கிறார். தனி நீதிபதி முன்பு நடந்த விசாரணையின்போது தன்னை கட்சியிலிருந்து நீக்கியது தவறு என்றால், அதன்பின் நடந்த நடைமுறைகள் மட்டும் எப்படி சரியாகும்? எனவே, இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும்’ என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
‘கட்சியில் நீக்கம் தவறு என்று கூறிய தனிநீதிபதி, தீர்மானத்தை ரத்து செய்யவில்லை. அதனால், குறைந்தபட்சம் இடைக்காலமாக மீண்டும் கட்சியில் சேர்க்க உத்தரவிட்டிருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக, உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ கூறவில்லை. எனவே, அந்த பதவிகள் காலாவதியாகவில்லை’ என்கின்ற வாதங்களும் முன்வைக்கப்பட்டன.இதையடுத்து நீதிபதிகள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரியை ஏன் அணுகவில்லை என்று கேட்டதுடன், குறித்த காலத்திற்குள் இந்த வழக்கை முடிக்கலாம் என்று தெரிவித்திருந்தனர்.
இதற்கு ஓபிஎஸ் தரப்பில், ‘குறித்த காலத்திற்குள் முடிப்பதாக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக நீடித்தால் தன்னுடைய நிலை என்ன?’என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘ஓபிஎஸ்ஸுக்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இல்லை’ என்று எடப்பாடி சார்பில் வாதிடப்படவும், ‘எங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது. இடைக்கால நிவாரணம் அளித்திருந்தால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும்’ என்று ஓபிஎஸ் தரப்பு அதிரடியாக பதில் சொன்னது. இதையடுத்து, நேரடியாக இறுதி விசாரணை நடத்துவது குறித்து இரு தரப்பிடமும் ஆலோசிக்கப்பட்டது. நேரடி இறுதி விசாரணைக்கு ஓபிஎஸ் – எடப்பாடி இரு தரப்பினரும் ஒப்புக் கொண்ட நிலையில், இரு தரப்புகளும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது..
எனினும், எந்தவிதமான உத்தரவையும் நீதிபதிகள் அப்போது பிறப்பிக்காத நிலையில், இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு, அதாவது இன்றைய தேதிக்கு ஒத்திவைத்து சென்னை டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது. இன்றையதினம் இறுதி விசாரணையா? இடைக்கால நிவாரணமா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அந்தவகையில், இடைக்கால நிவாரண கேட்டு ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் இறுதி விசாரணை தொடங்கியது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் ‘இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது’ என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஏதேனும் இடைக்கால உத்தரவை பிறப்பித்தால் சிக்கலை ஏற்படுத்தும் என்று நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்ததுடன், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்தனர்.
எனவே, இந்த வழக்கிலும் ஓ.பி.எஸ். தரப்பிற்கு ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. எடப்பாடி தரப்பினர் உற்சாகமாக இருக்கின்றனர்!