எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை 99 சதவீதம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாலும், தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் இரண்டும்தான் அவருக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது நிலுவையில் இருக்கும் நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்கும் வழக்கு அவசரமாக கடந்த 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி கொள்ளலாம். ஆனால் முடிவுகளை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடந்து முடிந்தது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது ஓ பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஜூலை 11 பொதுக்குழு தீர்மானம் செல்லும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.

இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று கொண்டு அடுத்தடுத்து அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது பற்றிய விபரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இமெயில் மற்றும் தபால் மூலம் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்பதை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிநீதிபதி தள்ளுபடி செய்த மனுவை எதிர்த்து இருவர் அமர்வில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இதன் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான விஷயங்களை ஏற்க கூடாது என ராமச்சந்திர ஆதித்தன் என்பவர் நேரில் மனு அளித்துள்ளார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ள ராமச்சந்திர ஆதித்தன், நிலுவையில் உள்ள வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரை அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal