இன்றைய காலகட்டத்தில் ‘தோள் கொடுப்பான் தோழன்’ என்ற பழமொழி யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ தெரியாது. ஆனால், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கும், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் நன்றாகப் பொருந்தும்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று உயர் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மற்றும் அதன் மீதான விவாதம் நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பதிலுரை ஆற்றிப் பேசினார்.

அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கம்யூனிசம், பாசிசம் என ஒவ்வொன்றுக்காக விளக்கம் கொடுத்துவிட்டு, ‘‘ஆடும் மாட்டை ஆடிக் கறந்து, பாடும் மாட்டை பாடிக் கறந்து, அரசின் திட்டம் எனும் பாலினை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பதே ஸ்டாலினிசம்’’ எனத் தெரிவித்தார். மேலும், தந்தை ஸ்தானத்திலிருந்து ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கி உள்ளார். ஐநா சபையில் கல்வி மாற்றம் என்ற மாநாட்டில் இல்லம் தேடிக்கல்வி தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இதுதான் ஸ்டாலினிசம் எனத் தெரிவித்துள்ளா,

மேலும் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘‘பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை விட்டால் சமுதாயத்துக்கு ஐந்து நாள் இழப்பு. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த அரசு, ஆசிரியர்களை ஒரு போதும் கைவிடாது. 10 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 6 முதல் 8ம் வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று என 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தப்படும். நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டில் ரூ. 68.47 கோடி பெறப்பட்டுள்ளது. நடப்பாண்டு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் உள்ள மாதிரிப்பள்ளிகள் 250 கோடியில் மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்படும்’’ என பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.

பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை நடைபெறும்போது, முதல்வரிசையில் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின், தனது நண்பன் அன்பில் மகேஷுக்காக இரண்டாவது வரிசையில் அமர்ந்து அன்பிலின் பேச்சைக் கேட்டு ரசித்தார்! அதே போல், ‘‘அண்ணே வறாரு ஒதுங்கி போ… அண்ணே வறாரு ஒதுங்கி போ… என்ற காலம் போய், உச்சத்தில் உதயநிதி இருந்தாலும், இன்றைக்கு இறங்கி வந்து மக்களின் நலன் கேட்டு உதவி செய்து வருகிறார் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர்’’ என்று நண்பனை புகழ்ந்து பேசினார்.

அதே போல், அமைச்சராகி முதன் முதலாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘‘முதல்வர், சபாநாயகர், மூத்த அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என அனைவரையும் வாழ்த்தி பேசி விட்டு, கலைஞருக்கு தோளோடு தோள் கொடுத்த அன்பில் தர்மலிங்கம் தாத்தா… பொய்யாமொழி மாமா… இன்றைக்கு எனக்கு தோளோடு தோள் கொடுத்து நிற்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கும் நன்றி’’ என பேசினார்!

உதயநிதி ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று முதன் முதலாக, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போல் திருச்சியில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில், ‘துணை முதல்வருக்கு நிகரான பொறுப்புகளை வகித்து வருகிறார் அமைச்சர் உதயநிதி’ என்று பேசினார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! பாராளுமன்றத் தேர்தலுக்கு பின் நண்பனை துணைமுதல்வராகவும் பார்த்துவிடுவார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்கிறார்கள்!

இன்றைக்கு தமிழக அரசியல் களத்தில் இப்படியொரு ‘மூன்றாம் தலைமுறை’ நட்பை எந்தவொரு அரசியல் இயக்கத்திலும் பார்க்கமுடியாது. காரணம், சுயநலத்திற்காக கட்சி மாறிவிடுகிறார்கள்!

கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரைவிட, இந்த தொடரில் கூடுதல் ‘மதிப்பெண்’ பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal