பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா உதவி பேராசியரை இன்று அதிகாலையில் போலீசார் கைது செய்த விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மத்திய, மாநில மகளிர் ஆணையம் சார்பில் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது பரபரப்பு புகார்களை சொன்னார்கள்.
இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்று மாணவிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி ஒருவர் அடையார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் ஹரி பத்மன் மீது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில், ஹரி பத்மன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், உல்லாசத்துக்கு வீட்டுக்கு அழைத்ததாகவும், அவரது தொல்லை தாங்காமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 3 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதற்கிடையே பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் ஹரி பத்மன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சென்றிருந்தார்.
இந்த நிலையில் கலை நிகழ்ச்சிக்காக ஐதராபாத் சென்றிருந்த ஹரி பத்மன் நேற்றிரவு சென்னை திரும்பினார். வடசென்னையில் நண்பர் ஒருவர் வீட்டில் இருந்த அவரை இன்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர்.