புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக கிழக்கு மாவட்டத் தலைவராக இருக்கும் செல்வம் அழகப்பன் அவர் பொறுப்பேற்றுக் கொண்டபிறகு நில மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பது குறித்து ‘தமிழக அரசியல்’ வார இதழில் நேற்று காலையில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நேற்று காலை பாதிக்கப் பட்டோர் தரப்பிலிருந்து சிட்டாள், ரவி அம்பலம், கல்யாணி ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே புகாரை விசாரிப்பதாக ஒத்துக் கொண்டுள்ளார்.

அதன் பின்னர் முத்தரையர் சங்கத்தைச் சேர்ந்த ஆலவயல் மாணிக்கம் என்பவர் கூறுகையில், ‘‘இவ்வளவு மோசடிகள் நடந்திருக்கின்றன. பொதுவாகவே நகரத்தார் தவறேதும் செய்யப் பயப்படுவார்கள். ஆன்மீகத்திற்கும் நேர்மைக்கும் கட்டுப்படுவார்கள். ஆனால் நேர்மைக்கும் செல்வம் அழகப்பனுக்கம் சம்பந்தமே கிடையாது. அதே போல் ஆன்மீகப் பணியில் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் இவர் கோயில் சொத்துக்களையே ஆட்டையைப் போட்டிருக்கிறார்.

இவரது தவறான நிலமோசடியில் பாதிக்கப் பட்டவர்களில் அதிகம்பேர் முத்தரையர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களைக் காக்க வேண்டும் என்பதால்தான் எஸ்பியிடம் புகார் கொடுத்து வந்திருக்கிறோம். மேலும் இதை நாங்கள் இப்படியே விட்டுவிட மாட்டோம். இது குறித்து திருச்சி ஆர்வி அய்யாவிடமும் பேசியிருக்கிறோம். அடுத்த கட்டத்திற்கு இதைக் கொண்டு செல்வோம்’’ என்றார்.
ரவி அம்பலம் என்பவர் கூறுகையில், ‘‘ பார்க்கச் சாதுவாக இருக்கும் செல்வம் அழகப்பன் அடியாட்களை வைத்துதான் மிரட்டுகிறார். இதில் யாரெல்லாம் பயப்படுகிறார்களோ அவர்கள் ஊரை விட்டு விட்டுப் போக வேண்டியதுதான். இப்போது நாங்கள் இந்த ஊரில் இருப்பதா அவருக்குப் பயந்து கொண்டு ஊரை விட்டுப் போவதா என்பதை நாங்கள் முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்’’ என்றார்.

இந்த நிலையில் பாஜகவின் மேலிடம் செல்வம் அழகப்பனின் மீது ஒரு கண் வைத்துள்ளது. காரணம் என்னவென்றால் இதற்கு முன்பு எத்தனையோ தலைவர்கள் மாவட்டப் பொறுப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஏற்படாத பிரச்சினைகள் செல்வம் அழகப்பன் வந்த பிறகுதான் பொது வெளியிலும் தனிப்பட்ட முறையிலும் கிளம்பியிருக்கின்றன. இது பாஜகவிற்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருவதாக தலைமை கருதத் தொடங்கியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal