இந்திய பக்கவாத சங்கம் மற்றும் சென்னை நியூரோ டிரஸ்ட் இணைந்து நடத்தும் 16-வது தேசிய பக்கவாத மாநாடு சென்னை ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டலில் நேற்று (31/03/2023) தொடங்கியது. பக்கவாத மாநாட்டின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தனராக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., கலந்துகொண்டு விழிப்புணர்வு காணொளி தொகுப்பை வெளியிட்ட பின்பு சிறப்புரையாற்றினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்திய பக்கவாத சங்கத்தின் தலைவர்பிரதீப் குமார், செயலாளர் அரவிந்த் சர்மா, மாநாடு ஒருங்கிணைப்புக்குழு தலைவர்நடராஜன், செயலாளர் ஹி.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பக்கவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சியில் நரம்பியல் நிபுணர்கள் அடைந்துள்ள சமீபத்திய முன்னேற்றங்களைத் தெரிந்துக் கொள்வதற்கும், பக்கவாதத்தை நிர்வகிப்பதில் நரம்பியல் நிபுணர்கள் இடையே அறிவு மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் இந்த மாநாடு நடைபெறுகிறது.
16-வது தேசிய பக்கவாத மாநாடு 31-ந்தேதி (நேற்று) தொடங்கி ஏப்ரல் 2-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 600-க்கும் மேற்பட்ட நரம்பியல் டாக்டர்கள், மருத்துவ மாணவர்களும், 6 நாடுகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்களும் பங்கேற்கின்றனர்.