ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்த போலீசார், அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளைகளை தொடங்கி தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக கவர்ச்சிகரமாக அறிவித்தனர்.

இதனை நம்பி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டன. இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 8 பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆருத்ரா நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிற்கு தொடர்பு இருப்பதாக பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணையில் இருந்து தப்பிக்க ஆர்.கே.சுரேஷ் 2 மாதமாக வெளிநாட்டில் தங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் கைதான நடிகர் ரூசோ அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal