திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்தில் ‘கல்வெட்டு’ அரசியலால், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா – கலைஞர் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் ‘அரசியல் நாகரீகம்’ நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். அதற்கு ஒரு உதாரணம், தொலைக்காட்சி விவாதங்களில் முதல்வரை கடுமையாக அப்போது விமர்சித்துப் பேசுபவர் கே.டி.ராகவன். இவர் தற்போது பி.ஜே.பி.யிலிருந்து விலகியிருந்தாலும், சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்த கே.டி.ராகவனை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இன்றைக்குக் கூட சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, ‘மதுரைக்கு மெட்ரோ ரயில் வருவதைவிட, தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ…

அதற்கு சபாநாயகர் அப்பாவு சிரித்துகொண்டே… ‘கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்தீர்கள்… சரி…, இப்போது நம்ம அமைச்சர் செய்வாரா என்று பார்ப்போம்… அமைச்சரே பதில் சொல்லுங்கள் என்றார்! பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு… ‘தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ ரொம்ப வெவரமானவர்… மதுரையில் எல்லோரும் மாட்டைதான் பிடிப்பார்கள் என்றால், எங்கள் அண்ணன் செல்லூர் ராஜு… புலிவாலையே பிடித்திருக்கிறார் என்று சொல்லிவிட்டு…. மதுரைக்கு விரைவில் சில நுறு கோடிகளில் டைடல் பார்க் வருகிறது’’ என்று சொன்னார். அந்தளவிற்கு சட்டமன்றத்திலேயே சகஜமாகத்தான் பேசி வருகிறார்கள்!

இப்படி மேல்மட்டத்தில் உள்ள தலைவர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கின்றனர். கீழ் மட்டத்தில் உள்ள சாதாரண தொண்டர்களை நிர்வாகிகள் உசுப்பேற்றி விட்டு மோதலை உண்டுபண்ணி விடுகின்றனர். இதுதெரியாமல்தான் சிலர் மோதிக் கொள்ளும் சம்பவமும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.

கடந்த ஆட்சியின் போது திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தில் ஒன்றிய அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. அதனை, எடப்பாடி பழனிசாமி திறந்தும் வைத்துவிட்டார்கள். இதற்கிடையில் ஆட்சி மாறிய பிறகு, மீண்டும் அமைச்சர் கே.என்.நேரு வந்து குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை திறந்தார். அதன் பிறகு தி.மு.க. சார்பில் கல்வெட்டு வைக்கப்பட்டது. ‘ முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் கல்வெட்டில் இடம்பெறவில்லை’ என்று இன்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததோடு, அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதற்கிடையே உப்பிலியபுரத்தில் உள்ள நடுநிலையாளர்கள் சிலரிடம் பேசும்போது, ‘‘சார், அரசியல் ரீதியாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பிரிந்து இருப்பது போல் இருக்கின்றனர். ஆனால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ‘கூட்டுக் கொள்ளை’ அடிப்பதில் மட்டும் இணைந்து விடுகின்றனர். இந்த விவகாரம் இரண்டு தலைமைகளுக்கு தெரியவேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகி ஒருவர்தான் ‘கோலோச்சி’ வந்தார். அந்த விசுவாசத்தில் தற்போதும், அ.தி.மு.க. புள்ளிக்கு உதவி வருகிறாராம்!

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களைக் கூட, அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டும். அவர்களது பெயரையும் போட வேண்டும் என்று நாகரீக அரசியலை முன்னெடுத்து வருகிறார் முதல்வர்! ஆனால், கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் செய்யும் செயல்தான், ஆளும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இனியாவது கீழ்மட்ட அரசியலில், மேல்மட்ட தலைமை கவனம் செலுத்தவேண்டும்’’ என்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal