‘போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக, காலதாமதமின்றி வழங்கவேண்டும்’ என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்!

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

‘‘தமிழக அரசு, அரசு போக்குவரத்தில் காலிப்பணியிடங்களை காலத்தே நிரப்ப முன்வர வேண்டும். அதே போல தமிழக அரசு, அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வினை நீதிமன்ற தீர்ப்பிற்கு ஏற்ப காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும்.

மேலும் அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி கடந்த 2021 ஏப்ரல் முதல் இதுவரை வயது முதிர்வில் ஓய்வுபெற்றுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் இரண்டு வருடங்களாகியும் வழங்கப்படாதது நியாயமற்றது. இதனை தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அவர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும்.

நாளைய தினம் நடைபெறவுள்ள சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் அரசு போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கையில் தொழிலாளர்களின் நலன் கருதி தமிழக அரசு, ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க மேற்கொள்ளும் நடவடிக்கையை கைவிடவும், அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் முன்வர வேண்டும்’’இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal