குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக பெண்களில் யார்-யாருக்கு கொடுப்பது என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது மிக முக்கிய வாக்குறுதியாக பார்க்கப்பட்டது. இந்த வாக்குறுதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எப்போது நிறைவேற்றுவார் என்று எதிர்க்கட்சிகள் பலமுறை சுட்டிக் காட்டி வந்தனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த சட்டசபை தொடரின் போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்காக முதல்கட்டமாக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து வருவாய் துறையினரும், மகளிர் மேம்பாட்டுத்துறையினரும் இந்த பணத்தை பெற தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகள் யார்-யார் என்பதை வருவாய் அடிப்படையில் பட்டியல் தயாரித்து வருகிறது. அரசு ஊழியர்கள், வருமான வரி கட்டுபவர்கள், அரசின் உதவித்தொகையை ஏற்கனவே பெறுபவர்கள் ஆகியோர் இந்த உதவித் தொகையை பெற இயலாது என்று அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர், விதவைகள், முதியோர் உதவித்தொகை கிடைக்க பெறாதவர்கள் என சுமார் 80 ஆயிரம் பேர் தான் மாதம் ரூ.1000 உதவித் தொகை பெற தகுதியானவர்கள் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘‘தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளின் வாழ்க்கை தரத்தை பொருளாதார ரீதியில் உயர்த்துவதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் தான் நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்து அதை செயல்படுத்தி வருகிறார். இதன் அடுத்தகட்டமாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டமாகும்.

இந்த திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆண்டு ஒதுக்கி உள்ளோம். தமிழ்நாட்டில் 2 கோடியே 33 லட்சம் ரேஷன் கார்டு தாரர்கள் உள்ளனர். இதில் யார்-யாருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்கும் என்பதை வருவாய்த்துறையினரும், மகளிர் மேம்பாட்டுத்திட்ட துறையும் இணைந்து பட்டியல் சேகரித்து வருகின்றனர். தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு இந்த உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதால் அதற்கேற்ப பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் நிதித்துறையின் பங்கு நிதி ஒதுக்குவது தான். தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் அளவுகோல் என்ன என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் மூத்த அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி முடிவு எடுப்பார். எனவே இவர்களுக்கு தான் ரூ.1000 பணம் கிடைக்கும். இவர்களுக்கு பணம் கிடைக்காது என்று இப்போதே யூகத்தின் அடிப்படையில் கருத்து கூற முடியாது. அது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எங்கள் துறையை பொறுத்தவரை தமிழகத்தின் வருமான வரி செலுத்துபவர்களின் பட்டியலை அந்த துறையில் இருந்து கேட்டு பெறுவோம்.

மேலும் கருவூலத்திற்கு பணம் ஒதுக்கும் போது அது முறையாக பயனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் ஆன்லைன் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு வங்கி கணக்கில் பணம் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். தமிழகத்தில் 2.33 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு இருக்கிறது என்பதற்காக அவ்வளவு பேருக்கும் பணம் கொடுக்க இயலாது. அப்படி பார்த்தால் ஆண்டுக்கு சுமார் ரூ.27,960 லட்சம் கோடி தேவைப்படும். இது பணவீக்கத்தை ஏற்படுத்திவிடும்.

எனவே அரசின் வழி காட்டுதலுக்கு ஏற்ப யார்-யார் தகுதி உடையவர்கள் என்பதை மகளிர் மேம்பாட்டு துறையினர் முடிவு செய்து எங்களுக்கு பட்டியல் வழங்குவார்கள். அந்த பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. முதலமைச்சரின் ஒப்புதலுக்கு பிறகுதான் யார்-யார் தகுதியானவர்கள் ரூ.1000 பெற யார்-யார் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்படும். இதற்காக வழிகாட்டுதல் குழு விரைவில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal