‘அமைச்சர் கரூர் செந்தில் பாலாஜி ஒரு டாஸ்மாக் கடைக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுத்தே ஆகனும் சொல்லிட்டாரு…’ என்று டாஸ்மாக் சூப்பர்வைசர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
தீபாவளி, பொங்கல், ஆங்கில வருட பிறப்பு போன்ற நாள்களில் மது விற்பனை என்பது வழக்கத்தை விட அதிமாக இருக்கும்.
அவை விடுமுறை நாள்கள் என்பதை தாண்டி, பல்வேறு தரப்பினரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது, வேறு இடங்களுக்கு பயணம் செய்வது என நெருங்கியவர்களுடன் மது அருந்துவது இந்ந நாட்களில் அதிகரித்து காணப்படும். எனவே, தமிழ்நாட்டின் டாஸ்மாக்கில் மது விற்பனை அத்தகைய தினங்களிலும், அதற்கு முந்தைய, பிந்தைய நாள்களிலும் சூடு பறக்கும்.
தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.45 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக நிதித்துறைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்திருந்தார். நாளுக்கு நாள் தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். டாஸ்மாக்கில் சரியான சில்லறை வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து வைக்கப்படுகிறது.
ஒவ்வொரு பாட்டிலுக்கும் இவ்வளவு என்று கமிஷன் பலருக்கு கொடுக்கப்படுவதாகவும், அதில் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று அவ்வப்போது புகார்கள் எழும். இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவினார் சி.டி.ஆர் நிர்மல் குமார். அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், ‘‘கரூர் செந்தில் பாலாஜி ஒரு டாஸ்மாக் கடைக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுத்தே ஆகனும் சொல்லிட்டாரு…’’ என்று டாஸ்மாக் சூப்பர்வைசர் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் இடையே வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே, டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வாங்கினால் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர்தான் கூறினார். ஆனால், அதே அமைச்சர், ‘கூடுதல் விலைக்கு விற்ற காசில் எங்களுக்கும் வேண்டும் என்று கேட்பதாக சூப்பர் வைசர், டாஸ்மாக் ஊழியர்களிடம் கேட்ட விவகாரம்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது!