கடந்த மார்ச் நான்காம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டம் துறையூர் உள்பட 24 இடங்களில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.302 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
துறையூருக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டது என்று மக்கள் நம்பிக்கொண்டிருக்கையில் சிலர் தங்களது சுயநலத்திற்காக பேருந்து நிலையத்தை கீரம்பூருக்கு அருகில் கொண்டு செல்ல முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், மேலும் கூட்ட நெருக்கடி, சாலை வசதியின்மை போன்றவை ஏற்படும் என்கிறார்கள் துறையூரைச் சேர்ந்த பொதுமக்கள்.
இது தொடர்பாக துறையூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், துறையூர் மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கிறார். அதற்கு முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறோம். துறையூருக்கு வர இருக்கிற புதிய பேருந்து நிலையம் முசிறி பிரிவு ரோட்டில் அமைத்தால் நன்றாக இருக்கும். காரணம் கரூர், நாமக்கல், குளித்தலை, முசிறி, சென்னை, பெரம்பலூர், திருச்சி என அனைத்து வழிகளில் இருந்து வரும் வாகனங்கள் எளிதாக செல்ல வாய்ப்பியிருக்கிறது.
ஆனால், துறையூர் & முசிறி பிரிவு ரோட்டில் இடம் இல்லை என்கிறார்கள். இது சுத்த பொய்! காரணம், துறையூர் & ஆத்தூர் ரோட்டில் அமைந்துள்ளது நல்ல காவல் தாய் அம்மன் கோவில்! இக்கோவிலுக்கு சொந்தமான 12.5 ஏக்கர் நிலம் துறையூர் & முசிறி பிரிவு ரோட்டில் அமைந்திருக்கிறது. இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.250 கோடி இருக்கும். இந்த நிலத்தை சில ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் ஆக்கிரப்பு செய்து வருகின்றனர். இந்த இடம் கோவிலுக்குச் சொந்தமான அரசாங்க இடம். இந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைய வேண்டும் என்பதுதான் துறையூர் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
அறநிலையத்துறையிடம் ஒப்புதல் வாங்கி, இங்கு பேருந்து நிலையம் அமைத்தால் நன்றாக இருக்கும்.
ஆனால், சிலர் கீரம்பூர் பகுதிகளில் ஏராளமான நிலங்களை வாங்கி குவித்து ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகின்றனர். இந்த இடத்திற்கு பேருந்து நிலையம் வந்தால், தங்களது பிஸினஸ் சூடுபிடிக்கும் என்ற காரணத்திற்காக, புதிய பேருந்து நிலையத்தை கீரம்பூர் பகுதிக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.
இப்பகுதியில் பேருந்து நிலையம் அமைத்தால் மீண்டும், வாகன நெரிசல்தான் ஏற்படும். காரணம், அருகாமையில் பெருமாள் கோவில் மலை அடிவாரம் உள்ளது. அங்கு குறுகலான பாதையாக இருக்கிறது. எனவே, புதிய பேருந்து நிலையத்தை சிலரது சுயநலத்திற்காக இடமாற்றம் செய்யாமல், மக்கள் நலன் கருதி, இந்த கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைத்தால், எந்தவொரு இடைஞ்சலும் ஏற்பாடாது’’ என்றார்கள்!
பொதுநலத்திலும், சுயநலத்தை தேடுபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சாட்டையடி கொடுப்பாரா..?