தமிழக பா.ஜ.க.வினர் கொத்துதுக் கொத்தாக அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். இதனால், அண்ணாமலைக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பனிப்போர் வெடித்துக் கிளம்பியிருக்கிறது.

அதே போல் காங்கிரசிலும், கே.எஸ்.அழகிரி மீதான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அழகிரி, ‘‘ஜி.கே.வாசன் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்ப வேண்டும். அவரது தலைமையின் கீழ் பணியாற்ற தயாராக இருக்கிறோம்’’ என்று பேசியிருக்கிறார்.

காரணம், ‘‘தமிழக தலைவரான அழகிரியை மாற்றிட வேண்டும் என்ற முடிவை எப்போதே ராகுல் எடுத்துவிட்டார். ஆனா, புதிய தலைவருக்கு பொருத்தமான ஆளை தேர்வு செய்வதில் குழப்பம் இருந்தபடியே இருந்ததால் அழகிரியின் பதவி தப்பித்துக் கொண்டே இருக்கிறது. முக்கியமான பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு முடிவு எடுக்காமலே இருக்கிறார்கள்… தலைவர் பதவி குறித்து விவாதம் நடந்தபோது, புதிய தலைவராக கார்த்தி (ப.சி.யின் மகன்) அல்லது விஷ்ணுபிரச்சாத்தை நியமியுங்கள். பின்னால் இருந்து நான் உதவுகிறேன் என்று சொல்லியுள்ளார் ப.சிதம்பரம்’’ என்கிறார்ர்ள் அவரது ஆதரவாளர்கள்.

கடந்த காலங்களில் இதுவரை, தனது மகனை தலைவராக்குங்கள் என ப.சிதம்பரம் சிபாரிசு செய்ததே இல்லை. முதல்முறையாக சிபாரிசு செய்துள்ளார். ஆனால், இது குறித்து இன்னும் சோனியாவும் ராகுலும் முடிவெடுக்கவில்லை. இந்த நிலையில்தான், ப.சி.யின் சிபாரிசை அறிந்த கே.எஸ். அழகிரி, கார்த்தி அல்லது விஷ்ணு பிரசாத் தலைவராக வந்தால் நமக்கான அரசியல் சுத்தமாக இருக்காது. காங்கிரசிலிருந்து தூக்கி எறியப்படுவோம் என யோசித்த அழகிரி, மேலிடத்தை குழப்புவதற்காகவே, வாசன் மீண்டும் காங்கிரசுக்கு திரும்ப வேண்டும் என்று பேசி வருகிறாராம்.

இதற்கிடையே, இப்படியான கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, கரூர் எம்.பி. ஜோதிமணியை தலைவராக்கலாமா? என்று யோசித்து வருகிறாராம் ராகுல்காந்தி. காரணம், ராகுலுக்கு நல்ல பரீட்சயமானவர் ஜோதிமணி!

அதே போல், ‘அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன்’ என்று நிர்வாகிகள் மத்தியில் பேசிய அண்ணாமலை, கடந்த சில தினங்களாக ‘மழுப்பலாக’ பதில் அளித்து வருகிறார். பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்ப அணியினர் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.வில் ஐக்கியமாகினர்.

இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை, ‘திராவிட கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை விரும்பவில்லை. தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன்’ என அண்ணாமலை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் அண்ணாமலையின் கருத்திற்கு பாஜகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட பாஜக துணை தலைவர் கங்காதேவி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் சின்னையா, சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

கடந்த சில மாதங்களாகவே, அண்ணாமலை மீது அதிருப்தி அலைகள் அடித்து வருகிறது. காரணம், ஒரு கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள், மூன்றாம் கட்டத் தலைவர்கள் இருப்பார்கள். ஆனால், அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு, இவர்கள் யாரும் இல்லை அல்லது டம்மியாக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, கே.டி.ராகவன், வினோஜ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் அமைதியாகிவிட்டனர்.

அண்ணாமலை மட்டும் ‘ஒன் மேன் ஆர்மி’யாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இப்படி இருந்தால் தமிழக பா.ஜ.க. வளராது, அழிவுப்பாதையை நோக்கி செல்லும் என மூத்த தலைவர்கள் சிலர் பிரதமரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதே போல், ‘அரசியலில் நெளிவு சுழிவு வேண்டும்… எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அரசியலில் பேசக்கூடாது’ எனவும் கூறியிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான், தமிழக பா.ஜ.க. தலைவராக வானதி சீனிவாசனை நியமிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தேசிய கட்சிகளில் தமிழக தலைவர்களாக வானதி சீனிவாசன், ஜோதிமணி ஆகியோர் நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கத்திரிக்காய் முத்துனுச்சானா கடைக்கு வந்துதானே ஆகவேண்டும்… அதுவரை பொறுமையாக இருப்போம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal