மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியால் சீனியர் அமைச்சர்கள்தான், கொந்தளித்துப் போயிருக்கிறார்கள் என்றால், தி.மு.க. மகளிரணிக்குள்ளும் செந்தில் பாலாஜி புகைச்சலை ஏற்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தி.மு.க-வில், மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கான நேர்க்காணல் மாவட்ட வாரியாக நடந்து வருகிறது. இந்த நேர்க்காணலை, கடந்த பிப்ரவரி 11-ம் தேதி தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக நேர்க்காணல் நடைபெற்று வருகிறது.

தி.மு.க-வின் மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும், அணியின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பொறுப்பு கனிமொழிக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. அமைப்பாளர் பதவிக்கான நேர்க்காணலை கனிமொழி தொடங்கிவைத்ததும் அந்தவகையில் தான். ஒவ்வொரு மாவட்டத்திலும், நேர்க்காணல் தொடர்பாக வெளியிடப்படும் விளம்பரம், நோட்டீஸ் உள்ளிட்டவைகளில் கனிமொழியின் படமும் இடம்பெறுகிறது. ஆனால், ‘‘கோவை மாநகர், கோவை தெற்கு, கோவை வடக்கு மாவட்டங்களுக்கு நடைபெறும் நேர்க்காணலில், கனிமொழியின் படம் அழைப்பிதழில் இடம்பெறவில்லை’’ எனக் கொதிக்கிறார்கள் கனிமொழியின் ஆதரவாளர்கள். கனிமொழிக்குப் பதிலாக அமைச்சர் உதயநிதியின் படம் விளம்பர நோட்டீஸில் இடம்பெற்றிருப்பது புதிய புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.

இதுதொடர்பாக மகளிரணி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘மார்ச் 22-ம் தேதி, கோவையில் நடைபெறவுள்ள இந்த நேர்க்காணலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் தலைமை வகிக்கிறார். நேர்க்காணலுக்காக அச்சடிக்கப்பட்ட விளம்பர நோட்டீஸில், கனிமொழியின் படத்தை திட்டமிட்டே புறக்கணித்திருக்கிறார் அவர். மகளிரணிக்கு மேற்பார்வை பொறுப்பு கனிமொழிதான் என கட்சித் தலைமையே அறிவுறுத்தியிருக்கிறது.

ஆனால், கனிமொழியின் பெயர், படத்தை நோட்டீஸில் போடாமல், ‘அமைச்சர் உதயநிதியின் அறிவுறுத்தலில் அணிப் பதவிகளுக்கான நேர்க்காணல் நடைபெறும்’ என நோட்டீஸ் அச்சடித்திருக்கிறார் செந்தில் பாலாஜி. உதயநிதியின் படத்தையும் நோட்டீஸில் போட்டிருக்கிறார். உதயநிதிக்கும் மகளிரணிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அவர் அறிவுறுத்தல் என்ன இருக்கிறது? கனிமொழியை இவர்கள் சீண்டிப்பார்ப்பது இது முதல் முறையல்ல.

அ.தி.மு.க-வில் இருப்பதுபோல, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைகளை தி.மு.க-வின் இளைஞரணியிலும் உருவாக்க முனைந்தார் உதயநிதி. கனிமொழியின் கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகே, அந்த முயற்சியை அவர் கைவிட்டார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்குப் பொறுப்பு அளிக்கப்பட்ட பகுதிக்குள், கனிமொழி பிரசாரம் செய்ய முதலில் திட்டமிடப்பட்டது.

ஆனால், கடைசி நேரத்தில் செந்தில் பாலாஜி மறுத்துவிட்டதால், கனிமொழியின் பிரசாரத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், அடுத்தநாளே உதயநிதியை அழைத்துவந்து கனிமொழி பேசவிருந்த அதே பகுதிக்குள் பிரசாரம் செய்ய வைத்தார் செந்தில் பாலாஜி. உதயநிதியை குளிர்வித்துதான் அரசியல் செய்ய வேண்டுமென செந்தில் பாலாஜி முடிவெடுத்தால், அது அவரது விருப்பம். ஆனால், அதற்காக கனிமொழியை சீண்டிப்பார்க்கக் கூடாது’’ எனக் கொதித்தனர்.

‘‘என்றைக்குமே செந்தில்பாலாஜியைப் பொறுத்தளவில் முதலில் தலைமைக்கு நெருக்கமாகி, பிறகு அனைவரும் வியக்கும் வகையில்தான் அவரது செயல்பாடுகள் இருக்கும். அ.தி.மு.க.வில் இருந்தபோது, ஒரு குடும்பத்திற்கு நெருக்கமாகி, அம்மாவையே ஏமாற்றியவராயிற்றே… இதெல்லாம் அவருக்கு சகஜம்…’’ என்றனர் செந்தில் பாலாஜியை நன்கு அறிந்தவர்கள்!

இந்த நோட்டீஸ் விவகாரம் தலைமை வரை புகாராகியிருக்கும் நிலையில், கனிமொழியின் பெயர், படத்தை அச்சடித்து புதிய நோட்டீஸ் விநியோகிக்கச் சொல்லியிருக்கிறதாம் அறிவாலயம். அதேநேரத்தில், தன்னுடைய பெயர், படம் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து தலைமையிடம் வருத்தத்தைத் தெரியப்படுத்தியிருக்கிறாராம் கனிமொழி. கட்சி மேலிடமும் அவரை சாந்தப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே சென்னையில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் சீனியர் அமைச்சர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுத்ததை சீனியர் அமைச்சர்கள் ரசிக்கவில்லை. காரணம், அமைச்சரவையில் பத்தாவது இடத்தில் இருக்கிறார்… பத்திரிகைகளில் முதலிடத்தைப் பிடிக்கிறாரே என்ற வருத்தமும் சீனியர்களிடையே எழுந்திருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal