ஒரு மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் அல்லது மற்ற கட்சி நிர்வாகிகள் ஆளுங்கட்சியில் இணைவதுதான் வழக்கம் என்பதோடு, சில சலுகைகளை அனுபவித்துக்கொள்ளலாம் என்பதால் இணைப்புகள் அரங்கேறும்!

ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க.விலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் தி-.மு.க.வில் இணையாமல், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைந்தனர். காரணம், ‘எடப்பாடியின் அரசியல் ஆளுமை நன்றாக இருக்கிறது’ என்று சொன்னார் பா.ஜ.க.விலிருந்து விலகிய சி.டி.ஆர். நிர்மல் குமார்! இவரைத் தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான பா.ஜ.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதனால், அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும் இடையே இருந்த பனிப்போர் வெடித்து வெட்ட வெளிச்சமானது.

சமீபகாலமாக அ.ம.மு.க. நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். அதாவது, அ.ம.மு.க.வில் இருந்த இரண்டாம் கட்டத் தலைவர்களே இணைந்து வருகின்றனர். இந்த நிலையில்தான், திருச்சி மலைக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய புள்ளியான அ.ம.மு.க. பொருளாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான மனோகரன் அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் கசிகிறது. அவருடன் அ.ம.மு.க.வில் மாநில பொறுப்பில் இருந்து சற்று விலகியிருக்கும், முத்தரையர் சமுதாயத்தின் பிரபலமுமான செல்வமோகன் துரைராஜும் அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி யிருக்கிறது.

செல்வமோகன் துரைராஜ்

திருச்சி அ.தி.மு.க.வைப் பொறுத்த அளவில் கோஷ்டி பூசல் அதிகம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோஷ்டியை உருவாக்கி வைத்து இருக்கின்றனர். திருச்சி மாவட்டத்திற்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது பத்தாண்டுகளாக மாவட்டச் செயலாளராக இருந்தவர் மனோகரன்! சிலகாலங்கள் திருச்சி புறநகர் மாவட்டத்தையும் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய கட்சிப் பணிகள் போற்றும் பணியாக சிறப்பாக இருந்தது. தற்போது, அ.ம.மு.க. வில் பொருளாளராக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில்தான், திருச்சியில் ‘பவர்புல்’லாக இருக்கும் மனோகரனை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடியார் தரப்பு முயற்சி செய்து வந்தது. இந்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வருகிறது. எனவே, விரைவில், முன்னாள் அ.தி.மு.க. கொறடா தலைமையில், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவருமான செல்வமோகன் துரைராஜ் உள்பட அ.ம.மு.க. மற்றும் பிற கட்சிகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏராளமானோர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதற்கிடையே அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகியிருக்கிறார். நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு, இந்த அறிவுப்பும் வெளியாகும் என்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal