கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள காவல் நிலையத்திற்குள் புகுந்து நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம்தான் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவும், திருச்சி சிவா எம்.பி.யும் சமரசம் ஆகியிருக்கிறார்கள். இந்த சமசரம் எப்படி நடந்தது என்கிற தகவல்கள் தற்போது வெளியாகியிதுக்கிறது.
அதாவது, திருச்சி காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்தின் ‘ஃபுட்டேஜை’ பார்த்த டி.ஜி.பி. சைலேந்திர பாபு கொதித்துப் போயிருக்கிறார். ‘உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுங்கள். முதல்வரின் நான் பேசிக்கொள்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகு முதல்வரிடம் அந்த ‘ஃபுட்டேஜை’ காண்பித்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொந்தளித்துவிட்டார். அந்தளவிற்கு விஷயம் விஸ்வரூபம் எடுத்துவிட்டது.
திருச்சியில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த தி.மு.க. தலைமைக்கும் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது. காரணம், தி.மு.க. ஆட்சியமைந்தவுடன் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பொதுவாக அமைச்சரவை கூட்டத்தில் நடந்ததை பொதுவெளியில் விவாதிப்பது கிடையாது அல்லது பத்திரிகைகளில் செய்திகளை கொடுப்பதும் கிடையாது. ஆனால், அன்றைக்கு நடந்த மீட்டிங்களில், ‘கட்சி நிர்வாகிகள் முதற்கொண்டு அமைச்சர்கள் வரை யாரும் காவல் நிலையத்திற்குள் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது. அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சரவையில் ஸ்டாலின் எச்சரித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது!
இந்த எச்சரிக்கை செய்திக்கு பிறகு, தி.மு.க.வினர் திருந்திவிட்டார்கள் என மக்கள் நினைத்துக்கொண்டிருந்த வேளையில்தான், திருச்சியில் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் காவல்நிலையத்திற்குள் புகுந்த தாக்குதல் நடத்தி வீடியோ வெளியானது. முன்னதாக திருச்சி சிவா எம்.பி., வீட்டில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதனால் கொந்தளித்துப் போன முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘திருச்சியில் என்ன நடக்கிறது?’ என்று கடுகடுத்த குரலில் கே.என்.நேருவிடும் கொந்தளித்திரக்கிறார். ‘அண்ணே எனக்கு எதுவுமே தெரியாது… கறுப்புக் கொடி காட்டியவர்களிடம், பெயர் போடாததற்கு நான் காரணமில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேளுங்கள்… என்று கூறிவிட்டு சென்றுவிட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.
அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் தி.மு.க.வில் நடக்கும் உட்கட்சி மோதலை நீங்கள்தான் விசாரித்து வருகிறீர்கள். ஆனால், உங்களுடைய மாவட்டமான திருச்சியிலேயே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து தாக்கியிருக்கிறார்கள். பொதுமக்கள் மத்தியில் அவப் பெயர் ஏற்படாதா… கட்சிக்காகவும், மக்களுக்காகவும் நான் இரவு பகலாக உழைத்து வருகிறேன். ஆனால், உங்களுக்கு கீழ் உள்ளவர்களால்தான் நமக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இந்த அவப்பெயரை உடனடியாக துடைத்தெறிய வேண்டும்!
காவல்நிலையத்தில் புகுந்து தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களை உடனடியாக சரண்டர் ஆகச் சொல்லுங்கள் என்று எச்சரிக்கைத் தொனியில் பேசியிருக்கிறார். உடனடியாக, சம்பந்தப்பட்டவர்களை போனில் அழைத்துப் பேசிய நேரு, காவல் நிலையத்தில் சரண்டர் ஆகும் படிச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் கைது சம்பவம் நடந்திருக்கிறது.
இந்த கைது மற்றும் இடைக்கால நீக்கம் வெறும் கண் துடைப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினார். இந்த நிலையில்தான், மீண்டும் கே.என்.நேருவை தொடர்பு கொண்ட ஸ்டாலின், ‘முதலில் திருச்சி சிவா வீட்டிற்கு சென்று அவருடன் சமரசமாகுங்கள்’ என்று கட்டளையிட்டிருக்கிறார். ‘அண்ணே மாலை 6 மணிக்கு சிவாவை சந்தித்துவிட்டு, உங்களிடம் பேசுகிறேன்-…’ என்று கூறிய நேரு, நேராக சிவா வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
சிவா வீட்டிற்கு நேரு வந்தபோதுகூட, ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து முதலில் வணக்கம் வைத்துக்கொள்ளவில்லை. வீடியோ கிராஃபர்களை வெளியே அனுப்பிய பிறகு, இருவரும் ‘மணம் விட்டுப்’ பேசியிருக்கிறார்கள். அதன் பிறகு வெளியே வந்த இருவரும், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்…. நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்….’ என்றனர்.
திருச்சி சிவா எம்.பி. பேசுகையில், ‘தனி நபர் நலனை விட, கட்சி நலன்தான் முக்கியம்’ என்று பேசினார். இது நேருவை மறைமுகமாக குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார் என்பது, ‘மலைக்கோட்டை பாலிடிக்ஸை’ அறிந்தவர்களுக்கு நன்றாகப் புரியும். இருவரும் சமரசம் அடைந்தாலும் உள்ளுக்கு புகைச்சல் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
இதற்கிடையே நேருவிடம் நல்ல பெயர் எடுக்கவேண்டும் அல்லது நேருவிடம் காரியம் சாதித்துக்கொள்ளவேண்டும் அல்லது அடுத்து எம்.எல்.ஏ., எம்.பி.யாக வேண்டும் என்று தாக்குதலில் ஈடுபட்டவர்களின் அரசியல் எதிர்காலம்தான் தற்பேது கேள்விக்குறியாக இருக்கிறது.
ஆக மொத்தத்தில், முதல்வர் கண் சிவந்ததால், மூத்த அமைச்சர் கே.என்.நேரு சரண்டராகியிருப்பதுதான், மலைக்கோட்டை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.