அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பா.ஜ.க. அசுர வளர்ச்சி பெற்றது என்ற மாய பிம்பம் உடைய ஆரம்பித்திருக்கிறது என்றே சொல்லலாம்! ஏனென்றால், அவரது செயல்பாடுகள் தமிழக பா.ஜ.க.வை அதலபாதாளத்திற்கு கொண்டு செல்வதாக இருக்கிறது.

இந்த நிலையில்தான் ‘‘திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என்றும் தேர்தலில் தனித்து போட்டியிடவே விருப்பம்’’ என்றும் சென்னை அமைந்தகரையில் நடந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அவர் கூறியதாவது: ‘‘தேர்தலின்போது யாருக்கும் சால்வை போட்டு குனிந்து செல்ல விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போட மாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். இதுதொடர்பாக பிரதமரை சந்தித்து பேசுவேன்’’ இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அதிமுக உடன் இணைந்து செயல்பட வேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஏற்கனவே அறிவுறுத்தி உள்ள நிலையில், கூட்டணி வேண்டாம் என அண்ணாமலை பேசியிருப்பதால் பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக உடனான கூட்டணி தொடர்பாக பாஜகவில் நிலவும் இருவேறு நிலைப்பாடுகளால் தமிழக பாஜகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியதாவது, ‘‘அதிமுக உடனான கூட்டணி தொடர்பாக தேசிய தலைமை முடிவு எடுக்கும். பாஜக உயர்மட்ட குழுவில் இதுகுறித்து பேச வேண்டும். பாஜக-வை வலுப்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் தொடர்பான முடிவை எடுக்கும் நேரம் இதுவல்ல’’ என்று கூறி உள்ளார்.

அண்ணாமலையின் ஆவேசம் குறித்து பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு கட்சி வளர்கிறது என்ற மாயத் தோற்றத்தை சிலர் உருவாக்கினார்கள். ஆனால், அது உண்மையல்ல… அண்ணாமலை என்ற தனி நபர்தான் வளர்ந்துகொண்டு வந்தார்.

ஒரு கட்சியை காவல் நிலையத்தைப் போல் நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டை முதன் முதலாக வைத்தவர் காயத்திரி ரகுராம். அதன் பின் மூத்த தலைவர்கள் சிலரே இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அரசியலில் நெளிவு சுழிவு வேண்டும். ஒரு முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குனிய வேண்டிய இடங்களில் குனிந்து, நிமிர வேண்டிய இடங்களல் நிமிர்ந்து அரசியல் கட்சி நடத்துகிறார்.

அதாவது, எடப்பாடி பழனிசாமியை தலைவராக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பா.ஜ.க.வினர் சிலர் விமர்சிக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சியிலிருந்துவிட்டு, அடுத்த தேர்தலை சந்திக்கும் போது எதிர்க்கட்சி அந்தஸ்தையே இழந்து விடுகிறது. (2011 தே.மு.தி.க. எதிர்க்கட்சி). அப்படியிருக்கும் போது, கடந்த பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியிலிருந்தும், எடப்பாடி தலைமையில் தேர்தலை சந்தித்து, மாபெரும் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். இதனை யாரும் பேச மறுப்பது ஏன்?

இந்த நிலையில்தான், நேற்று அமைந்தங்க¬யில் பேசிய அண்ணாமலை, ‘அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கு நான் ராஜினாமா செய்வேன்’ என்று பேசியிருக்கிறார். இதற்கிடையே தமிழக அரசியல் நிலவரம் குறித்து, தெள்ளத் தெளிவாக பிரதமர் மோடியிடம் எடுத்துக் கூறியிருக்கிறார். ஜி.கே.வாசன். எனவே, அண்ணாமலை விரைவில் ராஜினாமா செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal