அ.தி.மு.க. பொதுக்குழு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த வழக்கு விவகாரத்தில் எடப்பாடி தரப்பிற்கு சாதமாக தீர்ப்பு வரும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பினர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் மாறுபட்ட தீர்ப்புகள் கூறப்பட்டன. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக முதலில் தீர்ப்பளித்த நிலையில் 2-வதாக வந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக அமைந்திருந்தது. இதை எதிர்த்து ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார்.

இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த மாதம் 29-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு தீர்மானங்களில் தலையிடவில்லை என்றும், சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமே இதுபற்றி முடி வெடுக்கும் என்றும் தெரிவித்து இருந்தது. இதையடுத்து ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நடைபெற்றது.

மனுதாரரான மனோஜ் பாண்டியன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் குருகிருஷ்ணகுமார், ஜூலை 11-ந்தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் செயல்பட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். பொதுக்குழு முடிவுகள் அ.தி.மு.க. நிறுவனரான எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், எனவே கட்சி விதிகளுக்கு மாறாக தங்களை நீக்கிய தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்தரப்பினரின் கருத்தை கேட்காமலேயே இதனை செய்ய வேண்டும் என்றும் மனோஜ் பாண்டியன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் விஜய் நாராயணன், வைத்திய நாதன் ஆகியோர் கடந்த 9 மாதங்களாக ஓ.பி.எஸ். தரப்பினர் இதே வாதங்களை முன்வைத்து வருவதாக தெரிவித்தனர். இந்த வழக்கில் தங்கள் தரப்பு பதில் மனுவை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எதிர்மனுதாரர்களின் (எடப்பாடி பழனிசாமி தரப்பு) விளக்கத்தை கேட்காமல் எப்படி தடைவிதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 17-ந்தேதிக்கு தள்ளி வைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதில் மனுவை தாக்கல் செய்ய தயாராகி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் பதில் மனுவை தயாரித்து அதற்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி பழனிசாமியின் பதில் மனு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றோ, நாளையோ அல்லது வழக்கு விசாரணை நடைபெறும் நாளான 17-ந் தேதியோ பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

அ.தி.மு.க. சட்ட விதிகளின்படியே பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் எந்த விதிமீறலும் இல்லை என்பது போன்ற விளக்கங்களுடன் பதில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டே உத்தரவிட்டுள்ளது.

பொதுக்குழு செல்லும் என்றால் தீர்மானங்களும் செல்லுபடியாகும் தானே என்கிற கேள்வியை எழுப்பும் எடப்பாடி ஆதரவாளர்கள் நாளை நடைபெற உள்ள விசாரணையிலும் தங்களுக்கு சாதகமாகவே நிச்சயம் தீர்ப்பு கிடைக்கும் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

இதனால் நாளை மறுநாள் நடைபெற உள்ள வழக்கு விசாரணையை இரு தரப்பினரும் எதிர்நோக்கி உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal