ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வெற்றி மு.க.ஸ்டாலினுக்கு பெரிதாக சந்தோஷத்தை கொடுக்கவில்லை! அதே சமயம், தோல்வியால் எடப்பாடி பழனிசாமி துவண்டுவிடவும் இல்லை. ஆனால், இருவரும் சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை!

தி.மு.க.!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மூத்த அமைச்சர்கள் முத்துசாமியும், கே.என்.நேருவும் களத்தில் இறங்கினார்கள். அப்போது முத்துசாமி, ‘உங்களுக்கு செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது’ என்பதை மக்களிடம் ஓபனாகவே ஒத்துக்கொண்டார். அதன் பிறகு, அ.தி.மு.க.விற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தவுடன், தி.மு.க.விற்கு கொஞ்சம் அச்சம் அதிகமானவுடன், வாக்காளர்களை தேர்தல் பணிமனைகளில் அடைத்து வைத்து, ஒரு புதுவிதமாக தேர்தலை கையாண்டுதான் தி.மு.க. வெற்றி பெற்றது.

காரணம், தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, மாநாகராட்சி தி.மு.க. வசமிருந்தும், அமைச்சர் முத்துசாமி மீது அதிக அதிருப்தி இருப்பதை உடன் பிறப்புக்கள் அனைவரும் அறிந்ததுதான். இதற்கு ஒரு உதாரணம், தனது கட்சி வேட்பாளரையே, ஒன்றிய செயலாளர்கள் மூலமாக தோற்கடித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது! காலம் காலமாக கட்சிக்கு உழைத்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க.விலிருந்து விலகினார். அந்தளவிற்கு, தன்னை விட யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக அரசியல் செய்து வருகிறார் அமைச்சர் முத்துசாமி!

தோப்பு வெங்கடாச்சலம்

இதற்கிடையே, தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் இணைந்தார். அவரையும் தி.மு.க. தலைமை சரியாக பயன்படுத்தாதவாறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டது. இதையும் தாண்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், பெருந்துறை, பவானி, அந்தியூர், பவானி சாகர் ஆகிய தொகுதிகளை அடங்கிய ஈரோடு வடக்கு மாவட்டத்திற்கு தோப்பு வெங்கடாச்சலத்தை மாவட்டச் செயலாளராக நியமிக்க முடிவு செய்தார். இந்தக் கோப்புகள் எல்லாம் தலைமைக்கு சென்று இறுதி கட்டத்தில் திடீரென ரத்தாகிவிட்டது.

இதற்கிடையே தோப்பு வெங்கடாச்சலத்தை மாநில அளவிலான பொறுப்பு ஒன்றை ஏற்றுக்கொள்ளுமாறு செந்தில்பாலாஜி சொல்லி, தர்மபுரி பழனியப்பன் தோப்புவிடம் பேசியிருக்கிறார். அதற்கு தோப்பு வெங்கடாச்சாம் மௌனமாக இருந்துவிட்டாராம். இப்போதைக்கு எந்த பொறுப்பும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம் தோப்பு. இந்த நிலையில்தான் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தி.மு.க. தலைமை முடிவெடுத்திருக்கிறது என்கிறார்கள்.

ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும், என்.கே.கே.பி.ராஜாவிற்கு நெருக்கமான நண்பர் நல்லசிவம் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக ‘ஐபேக்’ டீம் கொடுத்த ரிப்போட்டை வைத்து, அவருக்கு எம்.எல்.ஏ. சீட் வழங்கப்படவில்லை. மா.செ.பதவியும் அவரிடம் இருந்து பிடுங்குவதாக இருந்த நிலையில் குடும்பத்துடன் சென்று தலைமையை சந்தித்து பதவியை தக்க வைத்துக்கொண்டார். தற்போது, அமைச்சருடம் கைகோர்த்துக் கொண்டு கட்சி நிர்வாகிகளை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துதிருக்கிறது.

செந்தில் பாலாஜி

இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று செந்தில் பாலாஜிக்கு கட்டளையிட்டும், அவர் வாரியிறைத்தும், அ.தி.மு.க. டெபாசிட்டை பெற்றது. இது முதல்வருக்கு வருத்தம்தான்! அ.தி.மு.க.வினர் வாக்களர்களையே சந்திக்க முடியாத நிலையிருந்தும் 45 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றது, முதல்வரை கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கிறது. அதாவது தேர்தலே ரத்தாகும் என்ற நிலைக்கு, வாக்காளர்கள் கவனிக்கப்பட்டும், அ.தி.மு.க. டெபாசிட் வாங்கியது பெரிய விஷயம் என்பதை உணராதவர்கள் யாருமில்லை!

எனவேதான், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இதே நிலை நீடித்தால் ஈரோட்டை தி.மு.க. கைப்பற்ற போராட வேண்டியநிலை வரும் என்பதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவை வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சில முடிவுகளை எடுக்க தயாராகி வருகிறாராம்!

அ.தி.மு.க.!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்தும், பொதுக்குழு செல்லும் என வாக்களிக்க சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வந்தும் அ.தி.மு.க.வால் 45 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுமார் 70 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெறுவோம் என்று நம்பி இருந்தார்.

ஆனால், 10&வது சுற்றில்தான் அ.தி.மு.க. டெபாசிட்டையே தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் களத்தில் வேகம் காட்ட வில்லை என்பதுதான் உண்மை. எஸ்.பி.வேலுமணி தன் பங்கிற்கு என்னவோ, அதை சரிவரச் செய்ததால்தான், 45 ஆயிரம் வாக்குகளை அ.தி.மு.க. பெற முடிந்தது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜியின் ஆதிக்கம் ஈரோட்டில் தொடரும் பட்சத்தில், அ.தி.மு.க. வெற்றி பெறுவது கடினமாகும்!

இதற்கிடையே கொங்குமண்டலத்தைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் செந்தில்பாலாஜியுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு அவர்கள் சரியாக பணியாற்றவில்லை என்கிறார்கள். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும், தி.மு.க.வில் ஐக்கியமாகலாம் என்கிறார்கள் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவர்கள்.

இதற்கிடையே அ.தி.மு.க.விலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கப்பட்ட பிறகு, நடந்து முடிந்த உள்ளாட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க. 100 சதவீத வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை எல்லாம் கணக்கில் வைத்துதான் எடப்பாடி பழனிசாமி சில முடிவுகளை எடுக்க காத்திருக்கிறாராம்.

ஈரோட்டைப் பொறுத்தளவில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கழகங்களிலும் உள்ள நிர்வாகிகள் ‘திறம்பட’ செயல்படாமல் ‘உள் பாலிடிக்ஸ்’ செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கள நிலவரம். எனவே, இரண்டு கழகங்களுமே கிழக்கு தேர்தல் முடிவை வைத்து சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பதுதான் ஈரோடு கிழக்கு உணர்த்தும் பாடமாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal