அடுத்த மாதம் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகி வருகிறது. மேலும் எடப்பாடி படத்துடன் புதிய உறுப்பினர் அட்டையும் தயாராக இருக்கிறது. பொதுக்குழு முடிந்தவுடன் விநியோகிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் வந்து விட்டது. அடுத்ததாக பொதுக் குழுவை கூட்டி பொதுச் செயலாளராக ஆவதற்கான வேலைகளில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கட்சியின் உறுப்பினர்கள் தான் வாக்களித்து பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனதுமே புதிய உறுப்பினர் அட்டை தயார் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் படத்துடன் புதிய அட்டை தயார் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான அட்டைகள் தயார் செய்யப்பட்டு கட்சி அலுவலகத்தில் 2 அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. புதிய அட்டை மூலம் தேர்தல் நடத்தினால் சட்ட சிக்கல்கள் உருவாகலாம் என்பதால் பொதுச் செயலாளர் தேர்தல் முடிந்த பிறகு புதிய அட்டையை வினியோகிக்க திட்டமிட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்ககோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் போடப்பட்ட வழக்கின் தீர்ப்பு வருகிற 17-ந்தேதி வருகிறது. அதன்பிறகு பொதுக்குழு கூட்டத்துக்கான தேதி முடிவு செய்யப்படும். பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு மாதம் முன்பே அறிவிப்பு வெளியிட வேண்டும். எனவே அடுத்த மாதம் (ஏப்ரல்) இறுதிக்குள் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்றும் கட்சியினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில் இன்னொரு முக்கிய பணியை செய்து முடிக்கும் படி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதாவது ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் அணிகளில் இருக்கும் அ.தி.மு.க. தொண்டர்களை இழுத்து இணைக்க வேண்டும்.

தினமும் நான்கைந்து பேரையாவது சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வேலைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கச்சிதமாக நடந்து வருகின்றன. பல முன்னணி நிர்வாகிகள் எடப்பாடி அணியில் இணைந்து வருகிறார்கள். டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சுற்றி தொண்டர்கள் இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal