சமீபத்தில்தான் டெல்லி துணை முதல்வர் சிசோடியாவை ‘மதுபான கொள்கை முறைகேடு’ வழக்கில் கைது செய்து சிறையில் தள்ளியது பா.ஜ.க.! அடுத்து பீகார் மாநில துணை முதல்வரை பா.ஜ.க. குறி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே துறை மந்திரியாக பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார். இந்த சமயத்தில் ரெயில்வே துறையில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் அதற்கு கைமாறாக குறைந்த விலைக்கு தங்கள் நிலங்களை லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு மாற்றி கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர் இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி ஆகியோரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்தனர். மேலும் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் வீட்டிலும் இந்த சோதனை நடந்தது. இந்த நிலையில் ரெயில்வே பணிக்கு நிலம் லஞ்சம் பெற்ற வழக்கில் தேஜஸ்வி யாதவ் கடந்த 4 – ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால் அன்று அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து தேஜஸ்வி யாதவ் இன்று பிற்பகல் பாட்னாவில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal