‘விரைவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார்’ என பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் கைதானவர் பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர். இவர் தற்போது டெல்லி மண்டோலி சிறையில் உள்ளார். இவர் முன்பு திகார் சிறையில் இருந்தார். அப்போது அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்.
இதற்காக டெல்லி மந்திரிகளுக்கு பல கோடி ரூபாய் கொடுத்ததாக அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இவருக்கும், டெல்லி அரசுக்கும் இடையே பின்னர் மோதல் போக்கு உருவானது. இதனால் ஆம் ஆத்மி அரசு மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வீசினார். குறிப்பாக தென் தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை வளர்ப்பதற்கு தன்னிடம் அந்த கட்சி நிர்வாகிகள் குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பணம் கேட்டதாகவும், தனக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி தருவதாக கூறி பணம் பெற்றதாகவும் கூறினார்.
இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் கோரினார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மைக்கு புறம்பானவை என அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தலைவர்கள் மறுத்தனர். இந்தநிலையில் டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக இன்னும் விசாரணை போய்க்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் மணிஷ் சிசோடியா கைது பற்றி கேட்டனர். அதற்கு சுகேஷ் சந்திரசேகர், “உண்மை வென்றது” என்று பதில் கூறினார். மேலும் அடுத்தது அரவிந்த் கெஜ்ரிவால்தான். விரைவில் அவர் சிக்குவார்” என்றும் தெரிவித்தார்.