ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்முருகனை, கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பி.எஸ். அறிவித்த சில மணி நேரங்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக அமைப்பு செயலாளர் செந்தில் முருகன் கட்சியின் அடிப்படை பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் சற்றுமுன் அறிவித்தார்.
இந்நிலையில் செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து நீக்கப்பட்ட சில மணிநேரத்தில் செந்தில் முருகன் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். செந்தில் முருகன் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.