வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போல போலி வீடியோவை வெளியிட்ட ஜார்கண்ட் (வடமாநில) மாநில இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்கள் பரப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் குழு தமிழகத்தில் ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறிந்தது. இதில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்பது உறுதியானது.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்திய பீகார் அதிகாரிகள் இன்று சென்னையில் ஆய்வு கூட்டத்தை நடத்தி கருத்து கேட்டு வருகிறார்கள். வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் நேரடி மேற்பார்வையில் போலியான வீடியோக்கள் மற்றும் தகவல்களை பரப்புவோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருப்பூரில் 3 வழக்குகளும், கிருஷ்ணகிரி, தூத்துக்குடியில் தலா ஒரு வழக்குகளும் என மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடையவர்களை பிடிக்க டெல்லி, பீகாருக்கு தனிப்படை போலீசார் சென்றுள்ளனர்.
வெளிமாவட்டங்களை போன்று சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் வடமாநிலத்தவர்கள் பலர் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். கட்டிட பணி, ஓட்டல் தொழில் உள்பட அனைத்து வேலைகளிலும் வடமாநிலத்தவர் ஈடுபட்டுள்ளதால் சென்னையிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தங்கி இருக்கும் வடமாநில தொழிலாளர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். போலி வீடியோக்களை பரப்புவதில் வடமாநிலத்தவர்களே அதிகம் ஈடுபட்டிருப்பதால் இதுபோன்ற கண்கணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியான மறைமலைநகர் பகுதியில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான புதிய வீடியோ ஒன்று பரப்பப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து இந்த வீடியோவை பரப்புபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இதன்படி குறிப்பிட்ட வீடியோவை கண்டறிந்த போலீசார் அதனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த வீடியோவில் வெளிமாநிலத்தில் நடந்த மோதல் சம்பவத்தை தமிழகத்தில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து குறிப்பிட்ட வீடியோவை பரப்பியவர் யார்? என்பது பற்றிய அதிரடி விசாணையில் போலீசார் இறங்கினர்.
அப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் யாதவ் என்ற வாலிபர் இந்த போலி வீடியோவை தனது செல்போன் மூலமாக பரப்பியது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து யாதவ் எங்கு தங்கி இருக்கிறார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் தாம்பரத்தை அடுத்த பொத்தேரியில் தனியார் நிறுவனம் ஒன்றில் தங்கி இருந்து கட்டுமான பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து மனோஜ் யாதவை மறைமலைநகர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது 2 பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பகைமையை உருவாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணைக்கு பின்னர் மனோஜ் யாதவ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார். மனோஜ் யாதவுடன் வெளிமாநிலங்களை சேர்ந்த 15 பேர் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இந்த போலி வீடியோவை பரப்பிய விவகாரத்தில் மேலும் 5 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முடிவில் போலி வீடியோவை பரப்பியது தெரிய வந்தால் அவர்களும் கைது செய்யப்படுவார்கள்.
இதற்கிடையே வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்களை வெளியிட்டதாக ஆவடி போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். “ஒபின் இண்டியா டாட் காம்’ என்ற இணைய தளம் மூலமாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக சூர்ய பிரகாஷ் என்பவர் திருநின்றவூர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் அந்த இணைய தளத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ரூசன், எடிட்டர் நுபுர்சர்மா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மேலும் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 153ஏ, 505 1(பி), 505(2) ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ள போலீசார் 2 பேரையும் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ராகுல் ரூசன், நுபுர்சர்மா இருவரும் நடத்தி வரும் இணைய தள முகவரியை வைத்து அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆவடி கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 2 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற போலி வீடியோக்களை மேலும் யாரும் பரப்புகிறார்களா? என்பது பற்றி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.