இளைஞர்நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி – பிரதமர் மோடி சந்திப்பு, ‘தமிழக்ததில் எதிர்ப்பு… டெல்லியில் உறவு…’ என்கிற விமர்சனத்தை தமிழகத்தைத் தாண்டி டெல்லி வரை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், சிங்கப்பூர் சென்றுவிட்டு, அங்கிருந்து இரண்டு நாள் அரசு பயணமாக டெல்லி சென்றார். அங்கு அமைச்சர் உதயநிதி தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும் தற்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி பூஜா-சிவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அன்றையதினம் பிற்பகலில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினார் அமைச்சர் உதயநிதி.
இதனைத் தொடர்ந்து கடந்த 28&ந்தேதி மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசினார். பிரதமர் உடனான சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. டெல்லி வரும் போது தன்னை சந்திக்கும்படி பிரதமர் மோடி கூறியிருந்தார், அதன்படி அவரை சந்தித்தேன் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு மக்களின் மனநிலையை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். நீட் விலக்கு கேட்டபோது பிரதமர் மோடி சில விளக்கங்களைத் தந்தார். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் தொடரும் என்று பிரதமரிடம் தெரிவித்தேன் என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
மேலும், கெலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பு தர வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டதாகவும், ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கங்கள் அமைக்க நிதி ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும், மத்திய அரசின் துறைகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் உதயநிதி தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள்… அவர்களது கூட்டணி கட்சித் தலைவர்களே… பிரதமரை சந்திப்பது அவ்வளவு எளிதல்ல என்ற நிலையில், உதயநிதிக்கு உடனடியாக ‘நேரம்’ கிடைத்தது எப்படி என டெல்லி மேலிட வட்டாரத்தில் பேசினோம்.
‘‘சார், காங்கிரஸ் அல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் பி.ஜே.பி.யின் எதிர்கால திட்டம். சமீபத்தில் நடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை கலைத்தது காங்கிரஸ்… அப்படிப்பட்ட காங்கிரஸை ஏன் முதுகில் சுமந்து செல்கிறீர்கள்’ என்று ஓபனாகவே பேசினார்.
அதற்கு, ‘மத்தியில் பா.ஜ.க. ஆட்சி கவிழ காரணமான அ.தி.மு.க.வை ஏன் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்’ என்ற தொனியில் தி.மு.க. பதிலடி கொடுத்தது. இந்த நிலையில்தான், உதயநிதி ஸ்டாலின் & மோடி சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதாவது வருகின்ற நாடாளுன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி வைக்கக் கூடாது என்பதுதான் மோடியின் விருப்பமாக இருக்கிறது.
பிரதமர் மோடியின் விருப்பத்தை தி.மு.க. நிறைவேற்றினால், தி.மு.க.வின் விருப்பத்தை பிரதமர் மோடி நிறைவேற்ற தயாராக இருக்கிறார். இந்த நிலையில்தான், முதன் முதலாக அமைச்சராகி டெல்லி சென்ற உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் சந்திக்காததுதான் பல்வேறு விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.
தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நேற்று வள்ளுவர் கோட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்த வேளையில்தான் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை சந்தித்துக் கொண்டிருந்தார். அதே போல் கம்யூனிஸ்டு கட்சிகளும் ‘திக் திக்’ மனநிலையில்தான் இருக்கிறது’’ என்றனர்.
எனவே, வருகிற பாராளுமன்றத் தேர்தலில் ‘மாற்றம் நிகழும்’ என்று அரசியல் கட்சிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்!