நாட்டில் நாளுக்கு நாள் கள்ளக்காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. முடிவில் கொலையில்தான் முடியும் என தெரிந்தும் துணிச்சலுடன் கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்கள். இங்கேதான் ஒரு கள்ளக்காதல் விவகாரம் வித்தியாசமாக ‘மாறி’ முடிந்திருக்கிறது.

பீகாரில் ககாரியா மாவட்டத்தில் ஹர்தியா என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் நீரஜ். இவருக்கு 2009-ல் திருமணம் ஆனது. மனைவி பெயர் ரூபி தேவி. இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இதனால் பூரித்துகிடந்தார் நீரஜ். ஆனால், அப்போதுதான், ரூபிக்கு ஒரு கள்ளக்காதலன் இருப்பது தெரியவந்தது.

இதைக் கேள்விப்பட்டதுமே, தலையில் இடியே விழுந்துவிட்டதுபோல அதிர்ந்துபோனார் நீரஜ். அந்த கள்ளக்காதலன் பெயர் முகேஷ். பஸ்ராஹா கிராமத்தில் வசித்து வருகிறாராம். தினக்கூலியாக ஒரு இடத்தில் வேலை பார்த்து வருகிறார் முகேஷ். எப்படியோ அவருடன் ரூபிக்கு பழக்கமாகிவிட்டது. அதற்கு பிறகு அவர்களின் கள்ளக்காதல் பலமாக வளர்ந்துள்ளது. ஆனாலும், முகேஷை தன்னுடைய மனைவி எப்படி, எங்கு சந்தித்திருக்க கூடும்? இந்த அளவுக்கு கள்ளக்காதல் வளர்ந்துவர காரணம் என்று ஆராய்ந்தார் நீரஜ். அப்போதுதான் அடுத்த அதிர்ச்சி முகேஷ் தலையில் விழுந்தது.

கல்யாணத்துக்கு முன்பே, பஸ்ராஹா கிராமத்தில் வசித்தபோது, முகேஷூடன் தொடர்பில் இருந்திருக்கிறார் ரூபி. அந்த முகேஷுக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது. அவருக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். எனினும், கல்யாணத்துக்கு முன்பிருந்தே ரூபி அவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். ரூபிக்கு கல்யாணம் ஆகி 4 பிள்ளைகள் பிறந்தும்கூட முகேஷூடன் உறவு நீண்டுள்ளதை அறிந்து அதிர்ந்து போனார் நீரஜ். இதனால் என்ன செய்வதென்றே புரியாமல் குழம்பி நின்றநேரத்தில்தான், நீரஜ் தலையில் இன்னொரு இடி வந்து டமால் என விழுந்தது. முகேஷூம், ரூபியும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்களாம்.

இந்த விஷயம் தன்னுடைய கணவனுக்கு தெரிந்துவிட்டது என்று அறிந்ததுமே, ரூபி அலர்ட் ஆனார். உடனே தன்னுடைய 4 பிள்ளைகளில், 3 பிள்ளைகளை மட்டும் அழைத்துக்கொண்டு, கிராமத்தில் இருந்து தப்பி வேறிடத்துக்கு சென்றுவிட்டார். வீட்டில் மனைவியை காணோம் என்றதும், நீரஜ்ஜூக்கு தலையே சுத்திவிட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த நீரஜ், பஸ்ராஹா போலீசில் புகார் தந்தார். அதில், ‘இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்பட கிராம பஞ்சாயத்து நடத்தப்பட்டது. ஆனால், முகேஷ் அதற்கு ஒப்பு கொள்ளாமல் தப்பி வாழ்ந்து வருகிறார்’ என தெரிவித்து உள்ளார்.

ரூபி -&- முகேஷ் மீது புகாரை தந்தாலும், நீரஜ்ஜுக்கு மனசே ஆறவில்லை. இப்படி துரோகம் செய்துவிட்டு, கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டாரே மனைவி என்று அதிர்ச்சி விலகாமல் இருந்தார். உடனே, முகேஷை பழிவாங்க முடிவு செய்தார். அதற்காக, முகேஷை தீர்த்துக்கட்ட நினைக்கவில்லை. மனைவியுடனான கள்ள உறவு குறித்தும் கேள்வியும் கேட்கவில்லை. போலீசுக்கும் போகவில்லை. மாறாக, முகேஷ் வீட்டுக்கு கிளம்பி போனார். முகேஷ் மனைவியுடன் அறிமுகம் செய்து கொண்டார்.

அந்த பெண்ணின் பெயரும் ரூபி என்பதை அறிந்து நீரஜ் திக்கு முக்காடிப்போனார். எனினும், பழிக்குப் பழி வாங்கியாக வேண்டும் என்பதால், முகேஷின் மனைவியுடன் நெருங்கி பழக நினைத்தார். இந்த ஒரு விஷயத்துக்காகவே, முகேஷின் ஆம்னி கிராமத்திலேயே நீரஜ் வசிக்க ஆரம்பித்தார். நாளடைவில், நீரஜ்ஜூக்கும், முகேஷின் ரூபிக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுவிட்டது. ஒருகட்டத்தில் கல்யாணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர்.. அதன்படியே, 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

மனைவியால் கைவிடப்பட்ட நிலையில், பழிக்கு பழி வாங்கும் வகையில், மனைவியின் கள்ளக்காதலரான முகேஷின் மனைவியை திருமணம் செய்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆளுக்கு ஒரு பக்க கள்ளக்காதல் ஜோடிகள், சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்… நாடு நல்லா முன்னேற்றமடைதுப்பா…?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal