அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக இல்லை… ஓ.பி.எஸ்.ஸுக்கும் அதில் ‘ஓட்டை’ இருக்கிறது என்றெல்லாம் வாங்கிய காசுக்காக தொலைக்காட்சி விவாதத்தில், அவரவர் ஆதரவாளர்களுக்கு விவாதிப்பதுதான் கட்சியினரையும், மக்களையும் முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறது ஒரு பக்கம்.
ஆனால், ஓ.பி.எஸ்.ஸிடம் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைய எடப்பாடி தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வருகிறது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் பெரம்பலூர் மாவட்டச் செயலாளருமான ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பில்லை. அவர்கள் இணைந்தாலும், அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் ஏற்றுக்கொள்வதாக இல்லை என்று தகவல்கள் கசிகிறது.
இந்த நிலையில்தான் மலைக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ‘மாஜி’ வெல்லமண்டி நடராஜன், அ.தி.மு.க.வில் இணைய எடப்பாடியார் தரப்பிடம் பேச்சு வார்த்தை நடத்தி முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. மிகவும் எளிமையாக இருக்கும் இவருக்கு, மலைக்கோட்டையில் பெரிதாக கெட்டப் பெயர் இல்லை என்பதால், வெல்லமண்டி நடராஜனை அ.தி.மு.க.வில் இணைக்கும் முயற்சிகள் விறுவிறுவென்று நடந்து வருகிறதாம். விரைவில், வெல்லமண்டி நடராஜன் எடப்பாடியார் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைய இருக்கிறாராம்.
காரணம், கடந்த சில நாட்களாக வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. திருச்சி தி.மு.க.வில் ‘இருமலைகள்’ இருக்கையில், தி.மு.க.வில் இணைந்தால் எதிர்காலம் கேள்விக்குரியாகிவிடும் என நினைத்த வெல்லமண்டி நடராஜன், மீண்டும் எடப்பாடியாரிடம் இணையும் முடிவிற்கு வந்துவிட்டாராம்!
இதே போல், வடமாவட்டம் மற்றும் தென்மாவட்டங்களில் உள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க.வில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்..!