தமிழக இளைஞர் நலன் விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு, இளைஞர் நலன் துறைக்கு அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் .

சமீபத்தில் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடிக்கு சிந்தடிக் ஓடுதளத்தை புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இது மட்டுமின்றி தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களாக விளையாட்டு துறை மீது அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றது.உலக அளவில் இப்படி ஒரு செஸ் ஒலிம்பியாட் நடந்தது இல்லை என்று மெச்சும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக இந்த தொடர் நடைபெற்றது. அதன்பின் மகளிர் டென்னிஸ் சென்னை ஓபன் நடைபெற்றது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு வீரர்களை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தயார் செய்யும் திட்டங்களை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. மேலும் உலக அளவில் தமிழ்நாட்டை விளையாட்டிற்கான இருப்பிடமாக மாற்றும் திட்டத்திலும் தமிழ்நாடு அரசு களமிறங்கி உள்ளது. இதற்காக விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தையும் உதயநிதி ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.

இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் தற்போது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்குள்ள திமுக அலுவலகத்திற்கு சென்று ஆலோசனை நடத்த இருக்கிறார். அதன் பிறகு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் உடன் சந்திப்பு நடத்த உள்ளார். பல்வேறு முக்கிய திட்டங்கள், தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டிய விளையாட்டு திட்டங்கள் குறித்து அவர் கோரிக்கை வைக்க உள்ளார். இது தொடர்பாக சில மனுக்களை அளிக்க உள்ளார்.

நாளை காலை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்த சந்திப்பிற்கு பின் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும், இந்த சந்திப்பிற்கு பின் வேறு பல காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக நீட் விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் நேரடி கோரிக்கை வைப்பார் என்று கூறப்படுகிறது. நேற்று இதற்கான நேரம் கேட்கப்பட்டு இருந்த நிலையில், உடனே பிரதமர் அலுவலகம் உதயநிதி சந்திப்பிற்கு நேரம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலினின் டெல்லி பயணம் குறித்து ‘மேலிடத்தில்’ சிலரிடம் பேசியபோது, ‘‘டெல்லியில் இதுநாள் வரை அரசியல் ரீதியாக சில காய்களை டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் நகர்த்தி வந்தனர். தற்போது அமைச்சராகியிருக்கும் உதயநிதியும் டெல்லி அரசியலை புரிந்துகொள்ள வேண்டும். மத்தியில் சில காய்களை உதயநிதி மூலம் நகர்த்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறாராம். அதாவது, அங்கு என்ன நடக்கிறது என்று, அங்குள்ள எம்.பி.க்களுக்குக் கூட தெரியக்கூடாது என்பதில் தி.மு.க. தலைமை தெளிவாக இருக்கிறது. விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வேறு வர இருக்கிறது’’ என்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal