அடுத்த மாதமே எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி பொதுச்செயலாளராக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது!
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி அதிமுக பொதுக்குழு செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும். மேலும் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதும் செல்லும். ஆனால் அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் தேர்தல் ஆணையம் கையிலேயே இறுதி முடிவு உள்ளது. தேர்தல் ஆணையம் இன்னும் இதில் முடிவு எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் இதில் என்ன முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்.
இப்போது உச்ச நீதிமன்றம் பொதுக்குழு நடந்தது செல்லும் என்று அறிவித்து உள்ளது. அதை தேர்தல் ஆணையம் இப்போது ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கலாம். தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தல் ஆணைய முடிவுகள் தன்னிச்சையானது. உச்ச நீதிமன்ற முடிவிற்கு எதிராக தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தாலும், அதை எதிர்த்து வழக்கு போடுவது பெரிதாக பலன் அளிக்காது. இந்த நிலையில் பொதுக்குழு நடந்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதனால் பொதுக்குழு முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முறையீடு செய்து உள்ளது.
இந்த நிலையில்தான் அதிமுக பொதுக்குழு வழக்கில் வெற்றிபெற்ற எடப்பாடி பழனிசாமி வேறு ஒரு முக்கியமான திட்டத்தை வகுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தேர்தல் ஆணையம் இதை ஏற்றுக்கொண்டவுடன் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை அடுத்த மாதமே நடத்த அவர் திட்டமிட்டு உள்ளாராம். அவரை எதிர்த்து யாரும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பதால் எடப்பாடி இதில் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் எடப்பாடி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார்.
இந்த நிலையில்தான் மே மாதம் மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பொதுக்கூட்டத்தை அவர் மதுரையில் நடத்தவும் முக்கியமான ஒரு காரணம் உள்ளதாம். எடப்பாடி என்றால் கொங்கு மண்டல தலைவர் என்ற இமேஜ் இருக்கிறது. அதை உடைத்து மூக்குலத்தோர் சமுதாயத்திலும் எனக்கு பலம் இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்ட இருக்கிறாராம். ஏற்கனவே, முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆர்.பி.உதயக்குமாருக்கு முக்கிய பொறுப்பை வழங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்த போது எடப்பாடி மதுரையில் இருந்தார். மதுரை வந்தாலே எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று இந்த தீர்ப்பின் போது அவர் கூறினார். அதோடு முத்துராமலிங்க தேவர் பெயரையும் குறிப்பிட்டார். இந்த நிலையில்தான் முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள். ஓ பன்னீர்செல்வம் காரணமாக முக்குலத்தோர் அப்செட் ஆக கூடாது என்பதற்காக இந்த கூட்டத்தை அவர் நடத்த வாய்ப்பு உள்ளது.
சமீபத்தில்தான் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் அ.தி.மு.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, முக்குலத்தோர் சமுதாயமும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க காத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!