ஓ.பன்னீர்செல்வத்துக்கு வலதுகரமாக செயல்பட்டவர் கோவை செல்வராஜ்! இவர் ஓ.பி.எஸ்.ஸுக்காக வரிந்து கட்டிக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமியை வறுத்தெடுப்பார். இந்த நிலையில்தான் திடீரென்று தி.மு.க.வில் ஐக்கியமான கோவை செல்வராஜ். அதன் பிறகு, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என இருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்தார் கோவை செல்வராஜ்!

ஓ.பன்னீரிடமிருந்து கோவை செல்வராஜை தட்டித் தூக்கியதன் பின்னணியில் இருந்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நிலையில்தான், ஓ.பன்னீரிடம் இருக்கும் இன்னொரு மாஜியையும் வளைக்க தி.மு.க. திட்டமிட்டிருக்கிறதாம். இந்த தகவல் நமக்கு வர, டெல்டா பகுதியில் உள்ள அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வில் உள்ள சில சீனியர்களிடம் பேசினோம்.

‘‘சார், நீங்கள் யாரைக் கேட்கிறீர்கள் என்று புரிகிறது’’ என்றவர்கள் எடுத்த எடுப்பிலேயே, ‘வைத்திலிங்கத்தைத் தானே சொல்கிறீர்கள்’’ என்றவர்கள், ‘‘ஓ.பன்னீருக்கு தற்போதை அரசியல் சூழ்நிலைகள் சரியில்லை. அவருக்கு தொடர்ச்சியாக பின்னடைவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை செல்வராஜ் தி.மு.க.வில் ஐக்கியமானார்.

தற்போது, அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சாதகமாக வந்திருக்கிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தரப்பு, ‘ஓ.பி.எஸ்., டி.டி.வி, சசிகலா மூவரையும் தவிர யார் வேண்டுமானாலும் அ.தி.மு.க.விற்கு வரலாம்’ என்ற அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்த அறிவிப்பிற்கு முக்கிய காரணம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஆகியோரை மனதில் வைத்துதான் எடப்பாடியார் ஆதரவாளர்கள் இப்படி பேசினார்கள். ஆனால், வைத்திலிங்கம் எடப்பாடி அணிக்கு போக விரும்பவில்லை. காரணம், எஸ்.பி.வேலுமணிக்கும், வைத்திலிங்கத்திற்கும் ஏழாம் பொருத்தம். கோவையில் இருந்து கொண்டு, தஞ்சை மாவட்டத்தை ஆட்டிப் படைத்தவர்தான் எஸ்.பி.வேலுமணி!

இந்த விவகாரம் குறித்து எடப்பாடியிடம் வைத்திலிங்கம் பலமுறை எடுத்துக் கூறியும், அவர் கண்டுகொள்ளவில்லையாம். எனவே, வைத்திலிங்கம் மீண்டும் அ.தி.மு.க.விற்கு போவதை விரும்பவில்லை.

வைத்திலிங்கத்தின் மனநிலையை நன்கு அறிந்த, டெல்டா மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில காய்களை நகர்த்தியிருக்கிறார். வைத்திலிங்கம் சட்டமன்ற உறுப்பினர், அன்பில் மகேஷ் பொறுப்பு அமைச்சர் என்பதைக் காட்டிலும், ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவருக்குமான நட்பு அதிகம். இதனை பயன்படுத்தி, வைத்திலிங்கத்தை தி.மு.க.விற்கு இழுக்க அன்பில் மகேஷ் மூலம் ஒரு பக்கம் காய் நகர்த்தப்பட்டு வருகிறது.

தவிர, ஆள் இழுப்பதிலும், அவர்களுக்கு ‘கொடுப்பதிலும்’ கெட்டிக்காரரான அமைச்சர் செந்தில் பாலாஜியும் வைத்திலிங்கத்திற்கு வலை விரித்திருக்கிறாராம். விரைவில் செந்தில் பாலாஜியின் வலைவில் வைத்திலிங்கம் சிக்குவார். ஏனென்றால், அப்போதுதான் அவருக்கு அரசியல் எதிர்காலம் இருக்கும். வைத்திலிங்கத்திற்கும் டெல்டாவில் கொஞ்சம் பவர் இருப்பதால், தி.மு.க. தலைமையும் கண் சிமிட்டி வருகிறது’’ என்றனர்.

எனவே, வைத்திலிங்கம் விரைவில் தி.மு.க.வில் ஐக்கியமானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal