‘எந்தக் கட்சியில் இருந்தாலும்… அந்தக் கட்சியில் தனக்கென ஒரு பிரம்மாண்டத்தையும், தனக்கென தனித்துவத்தையும் தடம் பதிப்பதில் வல்லவர் அமைச்சர் செந்தில்பாலாஜி!
ஈரோட்டிற்கு பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தார் முதல்வர் ஸ்டாலின். தொண்டர்கள் கொடுத்த உற்சாகமிகு வரவேற்பால் காரில் ஏறாமல் 500 மீட்டர் வரை நடந்தே சென்று அவர்கள் கொடுத்த வரவேற்பை ஏற்றுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின். அந்தளவிற்கு பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்து அசத்தியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இதற்காக நேற்றிரவே கோவை வந்துவிட்டார். கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்க வழக்கம் போல் தனது பிரம்மாண்டத்தை காட்டியிருந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி. ஏர்போர்ட் வாயில் தொடங்கி காளப்பட்டி பிரிவு வரை சாலையின் இரு மருங்கிலும் தொண்டர்கள் புத்தகங்கள், பொன்னாடைகள், பூங்கொத்துக்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பரிசுப் பொருட்களுடன் முதல்வரை வரவேற்க காத்திருந்தனர்.
வழக்கமாக விமானத்திலிருந்து இறங்கியதும் விஐபி கேட் வழியாக காரில் வரும் முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு காரில் ஏறாமல் நடந்தே சென்று தொண்டர்களை சந்தித்தார். சுமார் 500 மீட்டர் தூரம் நடந்தே சென்றுவிட்டார். விட்டால் இன்னும் சில தூரம் அவர் நடந்தே சென்றிருப்பார் போல் இருந்தது. ஆனால் அதற்குள் முதல்வரிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி ஏதோ கூற உடனடியாக காரில் ஏறி தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறு புறப்பட்டுவிட்டார்.
இதனிடையே தன்னை வரவேற்பதற்காக வந்திருக்கக் கூடிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்கும் வகையில் காளப்பட்டி பிரிவு வரை காரை மிகவும் மெதுவாக இயக்கக் கூறிவிட்டு அனைவரையும் சந்தித்த வண்ணம் முதல்வர் பயணித்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, முத்துசாமி மற்றும் அவரது உதவியாளர் தினேஷ் ஆகியோர் பயணித்தார்கள்.
கோவை வந்த முதலமைச்சரை வரவேற்க வேறு எந்த அமைச்சரும் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் வரவேண்டாம் ஈரோட்டில் இறுதிக்கட்ட தேர்தல் பணிகளை கவனியுங்கள் என முதல்வர் தரப்பிலிருந்தே அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது!