‘எதிர்காலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செந்தில்பாலாஜியால்தான் ஆபத்து காத்திருக்கிறது’ என்று எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் பேசியிருக்கிறார்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசை ஆதரித்து பெரியார் நகர் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்;-

‘‘நான் தான் இந்தியாவிலேயே முதன்மை முதலமைச்சர் என ஸ்டாலின் தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் ஸ்டாலின் என்ன திட்டம் கொண்டுவந்தார் என பிரச்சாரத்தின் போது கூற வேண்டும். திமுக ஆட்சியில் ஈரோடு மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைத்தது என ஸ்டாலின் ஒன்றையாவது சொல்ல வேண்டும். அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டும் வேலையை மட்டுமே ஸ்டாலின் செய்து வருகிறார். ஆட்சி நடத்தாமல் போட்டோ ஷூட் மட்டுமே நடத்தி வருகிறார் என இபிஎஸ் குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக – காங்கிரஸ் கூட்டணி அதை தடுத்து நிறுத்த சட்டப்போராட்டம் நடத்தியது அதிமுக. நீட் தேர்வுக்கு விலக்கு பெற அதிமுக நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் பொய் கூறுகிறார். திமுகவின் நீட் தேர்வு ரத்து வாக்குறுதியை நம்பி ஏமாந்து 15 மாணவச் செல்வங்களின் உயிர்களை இழந்துவிட்டோம்.

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடுகிறது. சந்தர்ப்பவாத ஸ்டாலினுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சரியான சவுக்கடி தாருங்கள்.

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு மிரட்டினால், அதற்கு அஞ்சமாட்டோம். கொடநாடு குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக ஆட்சி. கொடுங்குற்றம் புரிந்த அவர்களை ஜாமீனில் எடுத்தது திமுக. எனவே, கொடநாடு வழக்கு என்று கூறி எங்களை மிரட்டமுடியாது. 90 சதவீத வழக்கு விசாரணை முடிந்த நிலையில், எங்கள் மீது குற்றம் சுமத்துவதற்காக சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பேசிய இபிஎஸ் அதிமுகவின் 10 ஆண்டு பொற்கால ஆட்சி குறித்து ஸ்டாலின் தன்னுடன் விவாதிக்கத் தயாரா? என ஓபிஎஸ் சவால் விடுத்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் ரூ.1,62,000 கோடி கடன் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் ஆப்பு வைக்க போகிறார். பச்சோந்தி போல் நிறம் மாறக்கூடியவர்கள் தான் செந்தில் பாலாஜி’’ என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal