ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில் ‘திருச்சி – ஈரோடு’ அரசியல்தான் அனல்அடித்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் மலைக்கோட்டை வாசிகள்!

திருச்சிக்கும் ஈரோட்டிற்கும் என்ன சம்பந்தம் என மலைக்கோட்டை வாசிகளிடம் பேசினோம். ‘‘திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருப்பவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! கே.என்.நேருவால் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளும், அடிமட்டத்தில் இருக்கும் உடன் பிறப்புக்களும் அன்பில் மகேஷை நாடிச் செல்கின்றனர்!

தன்னை நாடிவருபவர்களை கைவிடாமல், ‘கழகப்பணியாற்றுங்கள் உங்கள் உழைப்பிற்கான முக்கியத்துவம் கிடைக்கும்’ என்று அவர்களை உற்சாகப்படுத்தி கழகப்பணி ஆற்றிவருபவர்தான் அன்பில் மகேஷ்!

இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கு முதன் முதலில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, அதன் பிறகுதான் மாவட்ட அமைச்சரான முத்துசாமி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் மற்ற அமைச்சர்களுக்கு வார்டுகளை ஒதுக்கினர்.

அந்த வகையில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியைச் சந்தித்தபோதும், ஈரோடு கிழக்கில் அன்னை சத்தியா நகர், சூரியம்பாளையம் பகுதிகளில் அ.தி.மு.க. வென்றது. இப்படி அ.தி.மு.க.விற்கு அதிக செல்வாக்கு உள்ள வார்டுகளை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஒதுக்கப்பட்ட பின்னணியில் கே.என்.நேருவின் அரசியல் ‘ஆபரேஷன்’ இருக்கிறது என்கிறார்கள்!

அ.தி.மு.க.விற்கு செல்வாக்கு அதிகமாக இருக்கும் அப்பகுதிகளில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் எளிமை அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்கள் அழைக்காமலேயே தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்துவிடுகிறார்கள். இப்பகுதிகளில் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்களுடன் டீ குடிப்பது, குழந்தைகளை கொஞ்சுவது என அன்பிலின் யதார்த்த அரசியல் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

‘நான் திருச்சிக்காரன் தேர்தல் முடிந்தவுடன் போய்விடுவேன் என்று நினைத்துவிடாதீர்கள். இங்கு உங்கள் பகுதியில் உள்ள பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் உங்களுக்கு தேவையானதை சொல்லுங்கள். தேர்தல் முடிந்த பிறகும் நானே செய்துகொடுக்கிறேன்’ என்று வாக்குறுதி அளித்திருக்கிறாராம்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வாக்குறுதிகள்தான் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அமைச்சர் கே.என்.நேருவின் ‘ கிழக்கு ஆபரேஷன் ஃபெயிலியர்’ ஆகிவிட்டது என்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal