‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழின் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ், தனது மின்னும் பொன்னெழுத்துக்களால் ஜெயலலிதாவின் மனதைக் கவர்ந்தவர்! சில சீனியர் அமைச்சர்களின் சட்டமன்ற உரைக்கூட இவரது எழுத்தக்களால்தான் சட்டமன்றத்தை அலங்கரித்தது!
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தரப்பினர் கைக்கு பத்திரிகையின் நிர்வாகம் சென்றதை அடுத்து அவர் நமது எம்ஜிஆர் நாளிதழில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், ஓபிஎஸ்- இபிஎஸ் வசம் அதிமுக சென்றதும் நமது அம்மா என்ற நாளிதழ் தொடங்கப்பட்டு அதற்கு மருது அழகுராஜ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான மோதல் உச்சம் அடைந்த நிலையில், நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில்தான் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;-
‘‘மராட்டிய மாநிலத்தின் சிவசேனா அரசியலை, பா.ஜ.க.வுக்கு பல்லக்கு தூக்கும் ஷிண்டேவை நோக்கி நகர்த்தியது போலவே, தமிழ் நாட்டிலும் அண்ணா தி.மு.க. அரசியலை அதே பா.ஜ.க.வுடன் 2024-நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கும் அண்ணாமலை உறவினர் எடப்பாடியை நோக்கி அதே நீதிமன்றம் வழியாக நகர்த்தி இருக்கிறது காவிக் கட்சி. இது என் போன்றோர் எதிர்பார்த்த ஒன்று தான்.
2017-ல் எப்படி சசிகலாவுக்கு எதிராக நீதிமன்றம் மூலமாக விரும்பிய தீர்ப்பை விரும்பிய வேகத்தில் வரவழைத்து அடிமை எடப்பாடி ஆட்சிக்கு அடித்தளம் அமைத்து தரப்பட்டதோ, அது போலவே இப்போதும் அதே பா.ஜ.க.வின் அரசியல் ஆதாயச் சூதாட்டம் மீண்டும் அரங்கேறி இருக்கிறது. ஈரோட்டு கிழக்கு இடைத்தேர்தல் வாக்களிப்புக்கு சிலமணி நேரங்களே எஞ்சியிருக்கும் நிலையில் பல வாரங்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த தீர்ப்பு இடைத் தேர்தல் வாக்களிப்பில் மக்களிடம் சலனத்தை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் உச்சநீதிமன்றம் அதனை கருத்தின் கொள்ளாது செயல் பட்டிருக்கிறது.
அது சரி, இது போன்ற வாய்ப்புகள் எதிர்கட்சிகள் எதற்கும் கிட்டாத சந்தர்ப்பம் என்பதை சாமானிய மக்களாலும் புரிந்து கொள்ள முடியும். ஆக.. வருமான வரித்துறை, அமலாக்க பிரிவு, சி.பி.ஐ என்னும் வரிசையில் பா.ஜ.க.வின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு நீதித் துறையும் பயன்படுத்தப்படுகிறது என்பது அப்பட்டமாகவே தெரிகிறது.
பதினோரு எம்.எல்.ஏக்களை மட்டுமே தன் வசம் வைத்திருந்த அன்றைய பா.ஜ.க. ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு இரட்டை இலை சின்னத்துக்கான உரிமை தொடங்கி பல சாதகங்கள் அன்று கிடைத்தன என்றால் இப்போது அந்த அரவணைப்பு எடப்பாடியை நோக்கி நகர்ந்து விட்ட நிலையில் எடப்பாடி கைகளில் வேண்டியதை தருகிற அலாவுதீனின் அற்புத விளக்கு இருப்பதற்கு சமம் தானே.. ஆனாலும் ஆட்டுக்கு தீனி போட்டு வளர்க்கும் பாசம் எல்லாம் தேர்தல் திருவிழா வரைக்கும் தான் என்பது ஆட்டுக்கும் அதனை ஏற்பாடு செய்திருக்கும் ஆட்டுக் குட்டிக்கும் பொருந்தும் தானே?’’ என மருது அழகுராஜ் காட்டமாக கூறியுள்ளார்.
பி.ஜே.பி.க்கு எதிராக இதுநாள் வரை பேசாமல் மௌனம் காத்து வந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், தற்போது பொங்கி எழுந்திருப்பதுதான் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.