அ.தி.மு.க.வில் நகராட்சி தலைவராக இருந்து முதல்வர் பதவி வரை சசிகலாவால் உயர்ந்து, அதே சசிகலாவால் 33 வருட அரசியல் வாழ்வில் ஓ.பி.எஸ். வீழ்ந்திருக்கிறார். அந்தக் கதையை தற்போது பார்ப்போம்…!
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும்… அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இதனால், அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்டிருக்கிறார்.
அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த ஓ பன்னீர் செல்வம் 3 முறை முதல்வராக இருந்தார். ஜெயலலிதா சிறை சென்ற போதெல்லாம் ஓ பன்னீர் செல்வத்திடம் மட்டுமே முதல்வர் பதவியை ஒப்படைத்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்த நிலையில் தான் தற்போது அவருக்கும், அதிமுகவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் சசிகலா தான் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ஓ பன்னீர் செல்வம் டீக்கடை தொழில் செய்து வந்து அதிமுகவில் செயல்பட்டு வந்தார். கடந்த 1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகராட்சி தலைவராக அவர் தேர்வானார். 1996 முதல் 2001 வரை அப்பதவியில் இருந்தார். இதையடுத்து 2001ல் முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். பெரியகுளம் தொகுதியில் வெற்றி பெற்ற அவர் வருவாய்த்துறை அமைச்சரானார். மேலும் முதல் முறையாக எம்எல்ஏவான அதேசமயத்தில் முதல்வர் பதவியையும் பெற்றார். அதாவது டான்சி வழக்கில் ஜெயலலிதா சிக்கியபோது 2001 செப்டம்பர் 21 முதல் 2002 மார்ச் 1ம் தேதி வரை முதல்வராக செயல்பட்டார். அதன்பிறகு பொதுப்பணித்துறை அமைச்சரானார்.
இதையடுத்து 2006ல் 2வது முறையாக பெரியகுளம் தொகுதி எம்எல்ஏவானார். எதிர்க்கட்சி தலைவராகவும், எதிர்க்கட்சி துணை தலைவராகவும் செயல்பட்டார். 2011ல் போடி தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வான ஓ பன்னீர் செல்வம் நிதி அமைச்சராக செயல்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்ததால் ஜெயலலிதாவுக்கு பதில் 2014 செப்டம்பர் 27 முதல் 2015 மே 22 வரை முதல்வராக இருந்தார். அதன்பிறகு 2016 சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏவாகி நிதி அமைச்சரானார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து 2016 டிசம்பரம் 6 முதல் 2017 பிப்ரவரி 14 வரை 3வது முறையாக முதல்வரானார். அதன்பிறகு 2017 ஆகஸ்ட் 21 முதல் 2021 மே மாதம் வரை துணை முதல்வராக இருந்ததோடு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியையும் வகித்து வந்தார். இந்நிலையில் தான் இன்றைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது ஓ பன்னீர் செல்வத்தின் 33 ஆண்டுகளுக்கு மேலான அதிமுக பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை முதல்வர் பதவியில் அமர்ந்து, செல்வாக்கு மிக்க தலைவராக ஓ பன்னீர் செல்வம் வலம் வந்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற தலைவர்கள் முதல் ஆளாக ஓ பன்னீர் செல்வத்தின் பெயர் இருந்தாலே இக்கட்டான காலத்தில் முதல்வர் பதவியை ஜெயலலிதா ஓ பன்னீர் செல்வத்துக்கே வழங்கி வந்தார். இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின்படி தற்போது ஓ பன்னீர் செல்வம் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. இதன்மூலம் அதிமுகவில் கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலான அவரது அரசியல் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த முற்றுப்புள்ளிக்கு காரணம் என்பது சசிகலா என்றே கூறப்படுகிறது. அதாவது அதிமுகவில் சசிகலாவால் வளர்ந்து உச்சம் தொட்ட ஓபிஎஸ் இப்போது அவராலே ஒன்றும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதாவது ஓ பன்னீர் செல்வத்துக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வர் பதவியை வழங்கினாலும் கூட தமிழக அரசியலில் அவர் ஜொலிக்க சசிகலா தான் காரணமாக இருந்தார். ஏனென்றால் தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி தலைவராக ஓ பன்னீர் செல்வம் 1991 முதல் 1996 வரை இருந்தார். சசிகலாவின் அண்ணன் மகனான டிடிவி தினகரன் 1999 நாடாளுமன்ற தேர்தலில் பெரியகுளத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சமயத்தில் டிடிவி தினகரனுக்கும், ஓ பன்னீர் செல்வம் உதவினார். மேலும் இருவரும் நெருக்கமாகினர். இதையடுத்து சசிகலாவின் குடும்பத்துக்கு பரீட்சயமானார் ஓ பன்னீர் செல்வம். இதையடுத்து 2001 சட்டசபை தேர்தலில் அவருக்கு பெரியகுளம் தொகுதியில் அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற பிறகு தான் அவர் தமிழக அரசியலில் அறியப்பட்ட நபராக மாறி முதல்வர் பதவி வரை உச்சம் தொட்டார்.
இவ்வாறு சசிகலாவின் உதவியுடன் முதல்வர் பதவி வரை உச்சம் தொட்ட ஓ பன்னீர் செல்வம் தற்போது அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. இதற்கும் சசிகலா தான் காரணம் என கூறப்படுகிறது. அதாவது ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் மாதம் இறந்தார். இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் முதல்வரானார். இந்த வேளையில் கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா முதல்வர் பதவி மீது கண்வைத்தார். சட்டசபை அதிமுக எம்எல்ஏக்கள் தலைவராக(முதல்வர்) தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். கட்சியில் இருந்து சசிகலாவால் நீக்கம் செய்யப்பட்டார்.
ஓ பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார். ஒரு அமைச்சர் உள்பட 7 எம்எல்ஏக்கள், 8 லோக்சபா எம்பிக்கள், 2 ராஜ்யசபா எம்பிக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர். இந்த வேளையில் தான் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறை சென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார். மேலும் பாஜக அறிவுரைப்படி ஓ பன்னீர் செல்வம் அதிமுகவில் இணைந்து துணை முதல்வர் பதவியை பெற்றார். அதன்பிறகு சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் ஆகினர். இந்நிலையில் தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராகி ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். மாறாக கடந்த 2017ல் ஓ பன்னீர் செல்வம் முதல்வராக தொடர சசிகலா அனுமதித்து இருந்தால் தற்போது அவருக்கு இந்நிலை வந்திருக்காது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.