ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வே.ரா. மறைவு காரணமாக இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் வருகிற 27-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.), மேனகா நவநீதன் (நாம் தமிழர்), ஆனந்த் (தே.மு.தி.க.) உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்தாலும் அவர்களைவிட தி.மு.க.வினர் தான் அதிகம் பேர் முகாமிட்டு தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மேயர்கள், வாரியத் தலைவர்கள், அணிகளின் நிர்வாகிகள், வட்ட பகுதி கழக செயலாளர்கள் என ஏராளமானோர் சென்று முகாமிட்டு கடந்த ஒரு மாதமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கனிமொழி எம்.பி., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னணி பேச்சாளர்கள் பிரசாரம் செய்திருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.
இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்று சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீதிவீதியாக சென்று வாக்கு கேட்கிறார்.
நாளை காலை 9 மணி அளவில் விருந்தினர் மாளிகையில் இருந்து பிரசார வேனில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரிய வலசு, பாரதி தியேட்டர், சக்தி ரோடு பஸ்நிலையம், மெட்ராஸ் ஓட்டல், மஜீத் வீதி வழியாக சென்று சம்பத் நகர் பகுதியில் பிரசாரம் செய்கிறார். அதன் பிறகு கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக சென்று காந்தி சிலை அருகே பிரசார வேனை நிறுத்தி அங்கு திரண்டிருக்கும் மக்களிடையே பேசுகிறார்.
இதன்பிறகு பூம்புகார் நகர், காந்திநகர், வல்லரசம்பட்டி வழியாக அக்ரஹாரம் சென்று பிரசாரம் செய்கிறார். அத்துடன் காலை பிரசாரத்தை முடித்துக் கொண்டு மதிய சாப்பாட்டுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மாலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மாலை 3 மணி அளவில் சம்பத் நகர், அம்மு மெஸ் பிரிவு, சின்னமுத்து வீதி வழியாக சென்று முனிசிபல் காலனி அருகே வேனில் இருந்தபடி பேசுகிறார். அதன்பிறகு மேட்டூர் ரோடு, பன்னீர் செல்வம் பூங்கா வழியாக சென்று பெரியார் நகரில் பிரசாரம் செய்து ‘கை’ சின்னத்துக்கு ஓட்டு கேட்கிறார். அத்துடன் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கிருந்து பின்னர் சென்னை புறப்படுகிறார்.
இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசை ஆதரித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளும் தீவிரமாக களம் இறங்கி ஓட்டு கேட்டு வந்தாலும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பலமுறை ஈரோடு சென்று இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டார்.
இன்று காலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை ராயப்பேட்டை தலைமை கழகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்த எடப்பாடி பழனிசாமி மதியம் விமானம் மூலம் புறப்பட்டு கோவை செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்று இன்று பிரசாரம் செய்கிறார். எடப்பாடி பழனிசாமி நாளையும் ஈரோடு தொகுதியில் இறுதிக்கட்ட சூறாவளி பிரசாரம் செய்கிறார். அரசியல் கட்சித்தலைவர்கள் ஈரோட்டில் நாளை முகாமிடுவதால் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
27-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் வெளியூரில் இருந்து பிரசாரத்துக்கு வந்தவர்கள் நாளை மாலை 6 மணிக்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் ஈரோட்டில் முகாமிட்டிருக்கும் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் தொகுதிக்கு பக்கத்தில் உள்ள ஊர்களில் முகாமிட்டு அங்கிருந்தபடி தேர்தல் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால் ஈரோடு தொகுதிகளில் மோதல் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.